அறிவுசார் நகரில் திறன் மையம் ஜெர்மனி பல்கலை உடன் பேச்சு
அறிவுசார் நகரில் திறன் மையம் ஜெர்மனி பல்கலை உடன் பேச்சு
ADDED : பிப் 12, 2025 10:52 PM

சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள, 'டிட்கோ'வின் அறிவுசார் நகரில் திறன் மையம் அமைக்க, ஜெர்மனியின் ஆர்.டபிள்யு.டி.எச்., ஆச்சென் பல்கலை உடன், தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா பேச்சு நடத்தியுள்ளார்.
தமிழக மாணவர்களுக்கு, சர்வதேச தரத்தில் கல்வி, வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கவும்; உலக நாடுகளின் அறிவு பரிமாற்றம், தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளவும், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் அறிவுசார் நகரம் அமைக்கிறது.
இது, 200 கோடி ரூபாயில், 1,700 ஏக்கரில் உருவாக்கப்படுகிறது.
அங்கு, தேசிய அளவிலும், வெளிநாடுகளிலும் முன்னணியில் உள்ள பல்கலை, கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தங்களின் ஆய்வகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், திறன் மையங்களை அமைக்கலாம்.
அறிவுசார் நகரில் திறன் மையம் அமைக்க வலியுறுத்தி, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, ஆர்.டபிள்யு.டி.எச்., ஆச்சென் பல்கலை அதிகாரிகள் உடன், சென்னையில் அமைச்சர் ராஜா பேச்சு நடத்தியுள்ளார்.

