மகளிர் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தமிழக அரசு ரூ.90 லட்சம் நிதி உதவி
மகளிர் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தமிழக அரசு ரூ.90 லட்சம் நிதி உதவி
ADDED : பிப் 29, 2024 11:35 PM

சென்னை:''மாணவர்கள், படிக்கும் காலத்திலேயே தொழில்முனைவோராக உருவாக, அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை, 8.98 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது,'' என, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
தமிழக அரசின், 'ஸ்டார்ட் அப் டி.என்' நிறுவனம் சார்பில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 15 மகளிர் 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கும்; 15 தொழில் வளர் காப்பகங்களுக்கும், 89.70 லட்சம் ரூபாயை, அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
மேலும் அவர், 'ஸ்டார்ட் அப் டி.என் கேட்டலிஸ்ட்' இணையதளத்தை வெளியிட்டதுடன், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் அறிக்கையையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், அன்பரசன் பேசியதாவது:
மாநில அரசின் நிதியுதவியுடன் இயங்கி வரும் தொழில் வளர்காப்பகங்களை, மகளிர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில், அதற்கான உறுப்பினர் கட்டணம், ஓராண்டிற்கான வாடகை கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த விழாவில், 15 மகளிர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில் வளர்காப்பகத்தை பயன்படுத்தி கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம், 14.70 லட்சம் ரூபாய் நிதி உதவியாக அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க, புத்தொழில் முனைவோர்களுக்கு ஆதார நிதி வழங்கப்படுகிறது.
கடந்த, 2021 - 22 முதல் இதுவரை, 132 நிறுவனங்களுக்கு, 13.95 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தொழில்முனைவோராக உருவாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டங்களில் மூன்று ஆண்டுகளில், 8.98 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், ஸ்டார்ட் அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

