பசுமை மின்சாரம் வாங்க முடியாமல் காத்திருக்கும் தமிழக தொழில் துறையினர்
பசுமை மின்சாரம் வாங்க முடியாமல் காத்திருக்கும் தமிழக தொழில் துறையினர்
ADDED : ஜன 04, 2025 12:25 AM

சென்னை:வெளிச்சந்தையில் இருந்து காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய பசுமை மின்சாரத்தை கொள்முதல் செய்ய, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவை எதிர்நோக்கி, சிறுதொழில் துறையினர் காத்திருக்கின்றனர்.
தமிழக மின்சார வாரியம், 150 கிலோ வாட் வரை தாழ்வழுத்த பிரிவிலும்; அதற்கு மேல் உயரழுத்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்குகிறது. உயரழுத்த பிரிவு நுகர்வோர்கள், மின் வாரியத்திடம் இருந்து மட்டுமின்றி, வெளிச்சந்தை மற்றும் மின்சார சந்தையிலும் மின்சாரம் வாங்கலாம்.தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், மின் வாரியத்திடம் இருந்து மின்சாரம் வாங்க வேண்டும். இந்நிறுவனங்கள், வெளிச்சந்தையில் இருந்து பசுமை மின்சாரம் கொள்முதல் செய்ய, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:மத்திய மின் துறையின் பசுமை மின்சார விதிகளின்படி, தாழ்வழுத்த பிரிவில், 100 கிலோ வாட் மேல் மின் இணைப்பு பெற்றுள்ள சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வெளிச்சந்தையில் இருந்து பசுமை மின்சாரத்தை வாங்கலாம். இந்த உத்தரவு, 2022 ஜூனில் வெளியானது. இதை,தமிழகத்தில் செயல்படுத்த, தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து, இதுதொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம், 2024 ஜூலையில் வரைவு அறிக்கை வெளியிட்டு, கருத்து கேட்டது. பலரும் கருத்து தெரிவித்து, ஐந்து மாதங்களாகியும், இதுவரை இறுதி ஆணை வெளியிடப்படவில்லை. விரைவில் ஆணையை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இறுதி கட்டத்தில் அரசாணை
இதுகுறித்து, மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 150 கிலோவாட் மேல் உயரழுத்த பிரிவு இருந்தாலும், அதை விட குறைவான அளவு தேவைப்படுவோரும், அதே பிரிவில் மின் இணைப்பு பெறலாம். எனவே, 63 கிலோவாட் மேல் மின் இணைப்பு பெற்றுள்ள உயரழுத்த நுகர்வோர்கள், வெளிச்சந்தையில் பசுமை மின்சாரம் வாங்குவதை அனுமதிக்கும் ஆணை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

