டிரம்ப் அறிவிப்பால் நிறுவனங்கள் 'கப்சிப்' முதலீட்டை ஈர்க்க தமிழக அதிகாரிகள் பேச்சு
டிரம்ப் அறிவிப்பால் நிறுவனங்கள் 'கப்சிப்' முதலீட்டை ஈர்க்க தமிழக அதிகாரிகள் பேச்சு
ADDED : பிப் 18, 2025 11:15 PM

சென்னை:தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க, கடந்த ஆண்டு இறுதியில், அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு, பல்வேறு நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
தற்போது அந்நாட்டு அதிபர் டிரம்பின் அறிவிப்புகளால், அமெரிக்க நிறுவனங்கள் தொழில் துவங்க தாமதம் செய்து வரும் நிலையில், அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொழில் துறை அமைச்சர் ராஜா, அதிகாரிகள் அடங்கிய குழு, இரு வார பயணமாக, 2024 ஆக., 27ல் அமெரிக்கா சென்றது.
இதன் வாயிலாக, 7,616 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் வகையில், 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உள்ள கார் தொழிற்சாலையை மீண்டும் துவக்குமாறு, போர்டு நிறுவனத்தின்உயரதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. அதை, அந்நிறுவனமும் ஏற்றது.ஆனால், தற்போது பல நிறுவனங்கள் அமைதி காத்து வருகின்றன.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:டிரம்ப் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால்,அந்நாட்டின் பல நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளில்
ஈடுபடாமல் அமைதி காக்கின்றன. இந்த நிலை விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன், தொழில் துவங்க தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கூறினார்.