தமிழக மின்கட்டமைப்பு நவீனமயம் மத்திய அரசு ஒப்புதல் தர வலியுறுத்தல்
தமிழக மின்கட்டமைப்பு நவீனமயம் மத்திய அரசு ஒப்புதல் தர வலியுறுத்தல்
ADDED : நவ 13, 2024 12:43 AM

சென்னை:தமிழக கடல் பகுதியில், 35,000 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க இயலும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மின்சாரத்தை எடுத்து வரும் வழித்தடங்கள், தமிழகத்துக்குள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
மத்திய மின்சார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில், அனைத்து மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது.
இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
மத்திய அரசின் நிதி நிறுவனங்களான, 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ்' நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்ட கடனுக்கான வட்டியை, 8 சதவீதமாக குறைக்க வேண்டும்.
தமிழக மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்கு, 3,246 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட கருத்துரு, மத்திய மின் துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
வரும், 2029 - 30க்குள் 75,300 மெகா வாட் மின்சாரம், பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா தொழில் துறையில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளது.
மத்திய மின் பரிமாற்ற பயன்பாட்டு நிறுவனம், மாநில மின் வினியோக நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமல், அந்த உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக மத்திய மின் வழித்தடத்தில் இணைக்க அனுமதி வழங்கி வருகிறது.
எனவே, மின்சார சட்ட விதிகளின் படி, உற்பத்தியாளர்களுக்கான மின் பரிமாற்ற கட்டண விலக்கு திரும்ப பெறப்பட வேண்டும்.
தமிழக கடல் பகுதியில், 35,000 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க இயலும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மின்சாரத்தை எடுத்து வரும் வழித்தடங்கள் தமிழகத்துக்குள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

