தேசிய சிறு தொழில் வாரியத்தில் புறக்கணிக்கப்படும் 'டான்ஸ்டியா'
தேசிய சிறு தொழில் வாரியத்தில் புறக்கணிக்கப்படும் 'டான்ஸ்டியா'
ADDED : மே 06, 2025 11:15 PM

சென்னை:தமிழகத்தில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களின் பிரச்னைகளை தெரிவித்து தீர்வு காண, தேசிய எம்.எஸ்.எம்.இ., எனப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வாரியத்தில், தங்களையும் உறுப்பினராக சேர்க்க மத்திய அரசை, தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் மோகன், பொதுச்செயலர் வாசுதேவன் கூறியதாவது:
தேசிய அளவில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் இருப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சிறு, குறுந்தொழில்களுக்கு முதன்மை சங்கமாக, 'டான்ஸ்டியா' உள்ளது.
நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்களில் காணப்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்கவும், தேசிய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வாரியம் செயல்படுகிறது.
இதன் தலைவராக, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சர் ஜித்தன்ராம் மஞ்சி உள்ளார். அந்த துறையை சேர்ந்த, 18 அதிகாரிகளும், அலுவல் சாரா நியமன உறுப்பினர்களாக பல மாநிலங்களின் சிறு, குறுந்தொழில்கள் சங்க பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரியத்தில், 2016க்கு பின், 'டான்ஸ்டியா' இடம்பெறவில்லை. தமிழகம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
பலமுறை டான்ஸ்டியாவை சேர்க்க, மத்திய அரசிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதுதொடர்பாக, மத்திய துறை அமைச்சரை கடந்த நவம்பரில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த போது, நியமனம் செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இன்னும் உறுப்பினராக சேர்க்கவில்லை.
எனவே, தமிழக சிறு, குறு தொழில்களின் பிரச்னைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, விரைவாக தீர்வு காண, டான்ஸ்டியாவை தேசிய சிறு, குறு, நடுத்தர தொழில் வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.