ADDED : அக் 08, 2025 01:03 AM

புதுடில்லி:அதானி குழுமத்தின் 'அதானி டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்டு டெக்னாலஜிஸ்' நிறுவனம் மீது, சுங்க வரி ஏய்ப்பு தொடர்பாக, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் விசாரணை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏவுகணை உதிரி பாகங்களை இறக்குமதி செய்ததற்கு செலுத்த வேண்டிய 77 கோடி ரூபாய் வரியை, அதானி டிபென்ஸ் செலுத்தவில்லை என்ற புகாரில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கடந்த மார்ச்சில் விசாரணையை துவங்கியதாக கூறப்படுகிறது. இது அதானி டிபென்ஸின் கடந்த நிதியாண்டு வருவாயில் 10 சதவீதத்துக்கும் அதிகம்.
சுங்க வரி மற்றும் சில வரி விலக்கு அளிக்கப்பட்ட நீண்ட துார ஏவுகணைகளுக்கான உதிரி பாகங்கள் என்று தவறாக வகைப்படுத்தி, குறுகிய துார ஏவுகணை பாகங்களை இறக்குமதி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறுகிய துார ஏவுகணை பாகங்களின் இறக்குமதிக்கு நம் நாட்டில் வரி வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து தங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விட்டதாகவும் அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. எனினும், ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் தொகையை செலுத்தியதா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
விசாரணையின்போது, இறக்குமதி செய்த பாகங்களை தவறாக வகைப்படுத்தியதை அதானி டிபென்ஸ் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற வரி ஏய்ப்பு வழக்குகளில், வழக்கமாக ஏய்ப்பு செய்யப்பட்ட வரியுடன் 100 சதவீத அபராதமும் விதிக்கப்படும்.