தேயிலை ஏற்றுமதி : நடப்பாண்டின் 6 மாதங்களில் ரூ.510 கோடி கூடுதல் வருவாய்
தேயிலை ஏற்றுமதி : நடப்பாண்டின் 6 மாதங்களில் ரூ.510 கோடி கூடுதல் வருவாய்
ADDED : செப் 28, 2025 01:47 AM

குன்னூர்:கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு ஆறு மாதங்களில், தேயிலை தூள் ஏற்றுமதியில், 510 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் மேற்கு வங்கம், கொல்கத்தாவில் செயல்பட்டு வரும், இந்திய தேயிலை வாரியம் சார்பில், இந்த ஆண்டு ஜன., முதல் ஜூன் வரை தேயிலை தூள் ஏற்றுமதி விபரம் வெளியிடப்பட்டது.
தேசிய அளவில், முதல் 6 மாதங்களில், 12.50 கோடி கிலோ தேயிலை தூள் ஏற்றுமதியானது. கடந்த ஆண்டு, இதே கால கட்டத்தில், 12.45 கோடி கிலோவாக இருந்தது.
வட மாநிலங்களில் இருந்து, இந்த ஆண்டு, 7.94 கோடி கிலோ ஏற்றுமதியான நிலையில், கடந்த ஆண்டு 7.17 கோடி கிலோவாக இருந்தது.
தென் மாநிலங்களில், இந்த ஆண்டு 4.56 கோடி கிலோ ஏற்றுமதியான நிலையில், கடந்த ஆண்டு, 5.28 கோடி கிலோவாக இருந்தது. தேசிய அளவில், கடந்த ஆண்டு சராசரி விலை, கிலோவிற்கு 251 ரூபாய் என இருந்த நிலையில், இந்த ஆண்டு 291 ரூபாயாக உயர்ந்தது.
தேசிய அளவில், கடந்த ஆண்டு ஜன., மாதம் முதல் ஜூன் மாதம் வரை, 3129.31 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதியின் மதிப்பு, இந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 3639.44 கோடி ரூபாயாக உயர்ந்தது.
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு ஏற்றுமதி மதிப்பு, 510.13 கோடி ரூபாய் என 16.30 சதவீதம் அதிகரித்தது.