ADDED : ஜூலை 09, 2026 06:49 AM

உணவு மற்றும் உணவுப் பொருள் உற்பத்திக்கான நொதித்தல் துறையில், பயோ ரியாக்டர் சாதனத்தை டெட்ரா பாக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம், நுண்ணுயிரிகள் வாயிலாக உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, உற்பத்தி மற்றும் செயல் திறனை மேம்படுத்த உதவும். 10 லிட்டர் முதல் 50,000 லிட்டர் வரையிலான திறன்களில் கிடைக்கும் இந்த அமைப்பு, மாசுபாடு அபாயத்தையும் செயல்பாட்டு செலவை 12 சதவீதம் வரை குறைக்க உதவும்.
மாருதி சுசூகியின் மின் சேமிப்பு அமைப்பு
மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், அரியானா மாநிலம் கார்கோடாவில் உள்ள தனது உற்பத்தி ஆலையில், 1 மெகாவாட்- மணி திறன் கொண்ட 'பி.இ.எஸ்.எஸ்' எனும் பேட்டரி மின் சேமிப்பு அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. விடுமுறை நாட்கள் மற்றும் மின் தேவை குறைவாக இருக்கும் நேரங்களில், சூரிய மின் நிலையத்தில் உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை சேமித்து, தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்த இது உதவும்.
ரூ.4,000 கோடி திரட்டிய என்.சி.டபிள்யு.,
ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனமான என்.சி.டபிள்யு., கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டியுள்ளது. இதில், 45 சதவீதம், நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள அலுவலக கட்டடங்களில் முதலீடு செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 3,000 கோடி ரூபாய் இலக்குடன் தொடங்கப்பட்ட இந்த நிதி, 4,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் சதுர அடி பரப்பளவுள்ள உயர்தர அலுவலக சொத்துகளில் முதலீடு செய்துள்ளது.
