அரசனுார் தொழிற்பேட்டை பணிகள்: சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பம்
அரசனுார் தொழிற்பேட்டை பணிகள்: சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பம்
UPDATED : டிச 25, 2024 01:42 PM
ADDED : டிச 25, 2024 01:45 AM

சிவகங்கை:சிவகங்கை அருகேயுள்ள அரசனுாரில், 775 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, மாநில சுற்றுச்சூழல் ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்த தொழில் வளாகத்தில் வாகனம், ஜவுளி தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, 36,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசனுாரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்பின் அரசனுார், கிளாதிரி கிராமங்களில் 1,451 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, அடுத்த முதல்வராக இருந்த பழனிசாமி அறிவித்தார். அதற்கு பின் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
ஆட்சி மாற்றத்துக்கு பின் கடந்த 2021 சட்டசபை கூட்டத்தில், சிவகங்கை அருகே அரசனுாரில், விரைவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு 1,451 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், இலுப்பைக்குடியில் 605 ஏக்கர், கிளாதிரியில் 62 ஏக்கர், அரசனுாரில் 108 ஏக்கர் என, ஒட்டுமொத்தமாக 775 ஏக்கர் நிலம் மட்டுமே தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது முதற்கட்டமாக, இப்பணிகளுக்காக 342 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிற்பேட்டை நிறுவுவதற்காக, மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திடம் தடையின்மை சான்றுக்கு, சிப்காட் நிர்வாக இயக்குனரகம் விண்ணப்பித்துள்ளது.
சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி அளித்ததும், சிப்காட் நிர்வாகம் இடங்களை ஒதுக்கீடு செய்து, தொழில் முனைவோர்களுக்கு வழங்கும்.

