ADDED : ஏப் 13, 2025 09:55 PM

ரூ.31,575 கோடி
அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக, கடந்த 1ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்திய பங்கு சந்தைகளில் இருந்து அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் 31,575 கோடி ரூபாயை திரும்பப் பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, நடப்பாண்டில் இதுவரை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்ற முதலீட்டு தொகை 1.48 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது-.
24.07 கோடி டன்
கடந்த 2024 - 25 நிதியாண்டின் ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி, 1.40 சதவீதம் குறைந்து 24.07 மில்லியன் டன்னாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 24.43 கோடி டன்னாக இருந்தது.
மாதத்தின் அடிப்படையிலும், கடந்த பிப்ரவரியில் நிலக்கரி இறக்குமதி, முந்தைய நிதியாண்டின் பிப்ரவரி மாதத்தில் இறக்குமதியான 2.16 கோடி டன்னை விட 1.81 கோடி டன்னாக குறைந்துள்ளது.
ரூ.1.89 லட்சம் கோடி
கடந்த நிதியாண்டில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 1.89 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன்களை தயாரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகமாகும். இதன் வாயிலாக, உலகளவில் ஐபோன்கள் தயாரிப்பில் இந்தியா 20 சதவீத பங்களிப்பை அளிக்கிறது.
மார்ச் மாதம் வரையிலான கடந்த நிதியாண்டில், இந்தியா வின் மொத்த உற்பத்தியில் இருந்து 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

