குறைந்த ஊதியம் பெறுவோர் எண்ணிக்கை சரிந்து வருகிறது 10 ஆண்டுகளில் 6.30% குறைந்துள்ளனர்
குறைந்த ஊதியம் பெறுவோர் எண்ணிக்கை சரிந்து வருகிறது 10 ஆண்டுகளில் 6.30% குறைந்துள்ளனர்
ADDED : நவ 30, 2024 11:14 PM

புதுடில்லி:இந்தியாவில் குறைந்த ஊதியம் பெறும் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் 6.30 சதவீதம் குறைந்துள்ளதாக, சர்வதேச தொழிலாளர் கள் அமைப்பு தன் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
'உலகளாவிய ஊதிய அறிக்கை 2024 - 25: உலகளவில் ஊதிய ஏற்றத்தாழ்வு குறைகிறா?' என்ற தலைப்பில், ஐ.எல்.ஓ., எனும் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு, கடந்த 28ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதில், குறைந்த ஊதியம் பெறும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர ஊதியமில்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டும் சேர்த்து, கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக 11 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது-.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 2008 முதல் 2018ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், குறைந்த ஊதியம் பெறும் மற்றும் நிரந்தர ஊதியம் இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை, ஆண்டு சராசரி விகிதம் முறையே, 6.30 மற்றும் 12.70 சதவீதம் குறைந்துள்ளது.
குறைந்த வருவாய் பிரிவினரை அதிகமாக கொண்ட நாடுகளில், ஊதிய சமத்துவமின்மையின் ஆண்டு சராசரி குறைவு, கடந்த 20 ஆண்டுகளில் 3.20 சதவீதம் முதல் 9.60 சதவீதம் வரை இருந்தது.
சமீப காலங்களில், பணவீக்கத்தை விட உலகளாவிய ஊதியங்கள் வேகமாக வளர்ந்து உள்ளன.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

