சென்னையில் கார் உற்பத்தி இல்லை இன்ஜின் மட்டுமே தயாரிக்க திட்டம்
சென்னையில் கார் உற்பத்தி இல்லை இன்ஜின் மட்டுமே தயாரிக்க திட்டம்
ADDED : மார் 18, 2025 10:51 PM

சென்னை:சென்னை மறைமலை நகரில் உள்ள 'போர்டு' நிறுவனத்தின் ஆலையில், இன்ஜின் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், உற்பத்தி துவங்க இருப்பதாகவும்; கார்கள் உற்பத்தி செய்யப்படாது என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க அரசு, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அதிக இறக்குமதி வரி விதிப்பதால், இங்கு கார் உற்பத்தி திட்டத்தை இந்நிறுவனம் கைவிட்டதாக தெரிகிறது.
2022க்கு பிறகு, போர்டின் குஜராத் ஆலையை டாடா நிறுவனம் கையகப்படுத்தினாலும், அங்கிருந்து இந்நிறுவனத்திற்கு தேவையான உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போது சென்னை ஆலையில், இன்ஜின் மற்றும் அது தொடர்பான உற்பத்தி மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக, என்டேவர், எவரெஸ்ட் மற்றும் மஸ்டாங் ஆகிய மின்சார மாடல் கார்களை இங்கு உற்பத்தி செய்ய, இந்நிறுவனம் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நாடு முழுதும் இந்நிறுவன விற்பனை மையங்கள் மூடப்பட்டு, பராமரிப்பு நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
அதனால், ஏற்றுமதிக்கான உற்பத்தியை மட்டுமே, இந்நிறுவனம் இங்கு மேற்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.
கால் நுாற்றாண்டு காலமாக இந்திய சந்தையில் இருந்த போர்டு நிறுவனம், கடும் போட்டி, அதிக செலவு பிடிக்கும் கார் பராமரிப்பு, கார்களை மேம்படுத்தாதது, புதிய அறிமுகங்கள் இல்லாதது போன்ற காரணங்களால், விற்பனையில் கடும் சரிவை சந்தித்தது.
இதையடுத்து செப்டம்பர் 2021ம் ஆண்டில், இந்தியாவில் கார் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதாக தெரிவித்தது.
இந்தியாவில், இந்நிறுவனத்துக்கு 17,310 கோடி ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2022ம் ஆண்டில், சென்னை மற்றும் குஜராத் ஆலைகள் மூடப்பட்டன. தற்போது சென்னை ஆலை மட்டுமே மூடப்பட்ட நிலையில் உள்ளது.