மத்திய அரசின் 'டிசைன் ஸ்டூடியோ' காத்திருக்கும் திருப்பூர் தொழில்துறை
மத்திய அரசின் 'டிசைன் ஸ்டூடியோ' காத்திருக்கும் திருப்பூர் தொழில்துறை
ADDED : ஜன 09, 2025 01:43 AM

திருப்பூர்:'டிசைன் ஸ்டூடியோ' திறக்கப்பட்டதும், சர்வதேச சந்தைகளில், திருப்பூருக்கு உயரிய அங்கீகாரம் கிடைக்கும் என, பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
மத்திய அரசின் மானிய உதவியுடன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டாக இயக்கும், 'நிப்ட்-டீ' கல்லுாரியில், 'டிசைன் ஸ்டூடியோ' அமைய உள்ளது.
மத்திய அரசின் 75 சதவீத மானியத்துடன், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 50,000 சதுரடி பரப்பில், 'டிசைன் ஸ்டூடியோ' அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. கட்டுமான பணி முடிந்து, அதிநவீன இயந்திரங்கள் பொருத்தும் பணி துவங்க இருக்கிறது.
'டிசைன் ஸ்டூடியோ' முழு செயல்பாட்டுக்கு வரும் போது, பல்வேறு டிசைன்களில் ஆடை வடிவமைக்கும் வாய்ப்பு உருவாகும். இதனால், இந்தியாவுக்கு என்று தனி அந்தஸ்து கிடைக்கும் என, தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, மத்திய வர்த்தக வளர்ச்சி வாரிய உறுப்பினர் ராஜா சண்முகம் கூறுகையில், “டிசைன் ஸ்டூடியோ அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. மார்ச் மாதத்தில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.
“வர்த்தகர்கள் அனுப்பும் 'டிசைனில்' ஆடை வடிவமைக்கும் நிலை மாறி, திருப்பூரில் உருவாகும் டிசைனுக்கு, ஆர்டர் பெறும் உயர்நிலையை அடைய முடியும்.
“சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சென்று கொண்டிருந்த ஆர்டர்கள், திருப்பூருக்கு மாறவும் வாய்ப்புள்ளது. இதன் வாயிலாக, சர்வதேச சந்தையில், திருப்பூருக்கு உயரிய அங்கீகாரம் கிடைக்கும்,” என்றார்.

