அதிவேக அச்சுக்கென காகிதம் டி.என்.பி.எல்., அறிமுகம்
அதிவேக அச்சுக்கென காகிதம் டி.என்.பி.எல்., அறிமுகம்
ADDED : அக் 13, 2025 11:11 PM

சென்னை : தமிழக அரசின் டி.என்.பி.எல்., நிறுவனம், அதிவேக அச்சுக்கான காகிதம் உட்பட நான்கு வகையான காகிதங்களை அறிமுகம் செய்து உள்ளது.
கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் தமிழக அரசின் டி.என்.பி.எல்., எனப்படும் தமிழக செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கு, ஆண்டுக்கு 4 லட்சம் டன் அச்சு மற்றும் எழுது காகிதம் உற்பத்தி செய்யும் திறனில் ஆலை உள்ளது.
திருச்சி மாவட்டம், மொண்டிப்பட்டியில் ஆண்டுக்கு, 2 லட்சம் டன் காகித அட்டை உற்பத்தி செய்யும் திறனுடைய ஆலையும் உள்ளது.
இந்நிறுவனம் தற்போது, 'காப்பிகிரவுன், ஸ்பெக்ட்ரம், ஆரா பிரின்ட், பெர்பெக்டோ பிரின்ட்' ஆகிய பெயர்களில் நான்கு வகையான காகிதங்களை அறிமுகம் செய்துள்ளது.
சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு உள்ள, 70 மற்றும், 75 ஜி.எஸ்.எம்., உடைய, 'காப்பிகிரவுன்' காகிதம் வாயிலாக, ஒரு நிமிடத்தில், 115 பக்கங்களை, அச்சிட முடியும். 'ஆரா பிரின்ட்' காகிதம், போஸ்டர் மற்றும் நோட்டு புத்தகங்கள் அச்சிட பயன்படும்.
மேலும், 80 ஜி.எம்.எம்., உடைய 'ஸ்பெக்ட்ரம்' காகிதமும், 85 ஜி.எஸ்.எம்., உடைய, 'பெக்பெக்டோ பிரின்ட்' காகிதமும், அச்சு மற்றும் எழுதுவதற்கு பயன்படும். இவை, அதிக தடிமன் உடையதாக திகழ்கின்றன.