ரூ.300 கோடியில் 'டிஷ்யூ பேப்பர்' ஆலை திருச்சியில் டி.என்.பி.எல்., அமைக்கிறது இயந்திரங்களுக்கு ஜெர்மனி நிறுவனத்துடன் ஒப்பந்தம்
ரூ.300 கோடியில் 'டிஷ்யூ பேப்பர்' ஆலை திருச்சியில் டி.என்.பி.எல்., அமைக்கிறது இயந்திரங்களுக்கு ஜெர்மனி நிறுவனத்துடன் ஒப்பந்தம்
ADDED : ஜூன் 08, 2025 12:10 AM

சென்னை:திருச்சி மாவட்டம் மொண்டிப்பட்டியில், 300 கோடி ரூபாயில், 'டிஷ்யூ பேப்பர்' உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்த ஆணையை ஜெர்மனியின், 'அன்ட்ரிட்ஸ்' நிறுவனத்துக்கு, டி.என்.பி.எல்., வழங்கியுள்ளது.
கரூர் மாவட்டம் காகிதபுரத்தில், தமிழக அரசின் டி.என்.பி.எல்., எனப்படும் தமிழக செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கு ஆண்டுக்கு, 4 லட்சம் டன் அச்சு மற்றும் எழுது காகிதம் உற்பத்தி செய்யும் திறன் உடைய ஆலை உள்ளது.
இதுதவிர, திருச்சி மணப்பாறை அருகில் உள்ள மொண்டிப்பட்டியில், ஆண்டுக்கு, 2 லட்சம் டன் காகித அட்டை உற்பத்தி செய்யும் திறன் உடைய ஆலை உள்ளது.
நம் நாட்டில் கொரோனா தொற்று நோய் ஊரடங்கிற்கு பின், டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, திருச்சி மொண்டிப்பட்டியில், 300 கோடி ரூபாயில் சர்வதேச தரத்தில் தினமும், 100 டன் டிஷ்யூ பேப்பர் உற்பத்தி செய்யும் திறனில் ஆலை அமைக்க, டி.என்.பி.எல்., நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த ஆலை, நவீன இயந்திரங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த பணியை, ஜெர்மனி நாட்டை சேர்ந்த, 'அன்ட்ரிட்ஸ்' நிறுவனத்துக்கு, டி.என்.பி.எல்., வழங்கியுள்ளது.
புதிய ஆலையில் சர்வதேச தரத்தில், 13 ஜி.எஸ்.எம்., முதல், 40 ஜி.எஸ்.எம்., வரை முகம் துடைக்க பயன்படுத்தப்படும் டிஷ்யூ பேப்பர், கழிப்பறையில் பயன்படுத்தப்படும் டிஷ்யூ பேப்பர், நாப்கின் டிஷ்யூ பேப்பர் ஆகிய டிஷ்யூ பேப்பர்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
அவை, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் டிஷ்யூ பேப்பர் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.