
கூட்டு
வியட்நாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் மின்சார கார் நிறுவனம், இந்தியா முழுதும் வாடிக்கையாளர் சேவை நெட்வொர்க்கை விரிவுபடுத்த, குளோபல் அஷூர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, வின்பாஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை குளோபல் அஷூர் வழங்கும். குறிப்பாக, 24 மணி நேரம் செயல்படும் பிரத்யேக கால் சென்டர், நாடு தழுவிய சாலைப் போக்குவரத்து உதவி, மொபைல் சார்ஜிங் தீர்வுகள் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயம்
டில்லியை தலைமையிடமாக கொண்ட கட்டுமான நிறுவனமான குளோப் சிவில் புராஜெக்ட்ஸ், 119 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியிட உள்ளது. முற்றிலும் புதிய பங்கு விற்பனை வாயிலாக திரட்டும் தொகையை மூலதன மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு பயன்படுத்த உள்ளது. வரும் 24ம் தேதி முதல் 26 வரை முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். பங்கு ஒன்றின் விலை 67 - 71 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அறிமுகம்
இந்தியாவில் அலாதீன் என்ற முதலீட்டு மேலாண்மை தளத்தை, ஜியோ பிளாக்ராக் சொத்து மேலாண்மை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிளாக்ராக் நிறுவனத்துடன் இணைந்து, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் உருவாக்கிய இந்நிறுவனம், மியூச்சுவல் பண்டு வணிகத்தில் ஈடுபட, செபி சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. டிஜிட்டல் முறையில் முதலீட்டை எளிதாக்கும் வகையில், இந்த தளம் செயல்படும் என ஜியோ பிளாக்ராக் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம்
இந்தியாவில் விண்வெளி மற்றும் ராணுவ தீர்வுகளை தயாரிப்பது தொடர்பாக, ஸ்பெயினைச் சேர்ந்த ராணுவ உபகரண தயாரிப்பாளரான இண்ட்ரா நிறுவனத்துடன், பெங்களூரைச் சேர்ந்த ஆக்ஸிஸ்கேட்ஸ் டெக்னாலஜீஸ் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. பாரீஸ் ஏர் கண்காட்சியில் அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இண்ட்ரா ராணுவ தயாரிப்புகளான டகான் ஆன்டெனா, ஏவுகணை தாக்குதலில் இருந்து விமானங்களை பாதுகாக்கும் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை ஆக்ஸிஸ்கேட்ஸ் தயாரிக்க உள்ளது.