
துாய்மையான ஸ்டீல் உற்பத்தி
தூய்மையான தொழில்நுட்பங்களைக் கொண்டு ஸ்டீல் உற்பத்தி செய்யவும், கார்பன் உமிழ்வை குறைக்கவும் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, மத்திய ஸ்டீல் துறை செயலர் சந்தீப் பவுண்ட்ரிக் தெரிவித்துள்ளார்.
அனைத்து வகையான ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும் என்றும், குறிப்பாக மறுசுழற்சி செய்யப்பட்ட ஸ்டீல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 80 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வருமான வரித்துறை ஆய்வு
நு கர்வோர் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பாளரான மாரிகோ குழுமத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், வரி ஏய்ப்பு தொடர்பாக நேற்று ஆய்வு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தேங்காய் எண்ணெய் பிராண்டான 'பாராசூட்' மாரிகோவுக்கு சொந்தமானது.
நாடு முழுதும் உள்ள குழுமத்தின் பல்வேறு அலுவலகங்களில் இந்த ஆய்வு நடைபெற்றதாகவும், வருமான வரித்துறையின் மும்பை பிரிவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. ரெய்டு அல்லது சோதனையைக் காட்டிலும், ஆய்வு நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் சற்று குறைவே.
எஸ் பேங்க் பங்குகள் விற்பனை
எஸ். பி.ஐ., 8,889 கோடி ரூபாய் மதிப்பிலான எஸ் பேங்க் பங்குகளை, ஜப்பானைச் சேர்ந்த எஸ்.எம்.பி.சி., வங்கிக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. பங்கு ஒன்றின் விலை 21.50 ரூபாய் என்ற அடிப்படையில், 413 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, எஸ் பேங்கில் எஸ்.பி.ஐ.,யின் பங்கு 23.96 சதவீதத்திலிருந்து 10.80 சதவீதமாக குறைந்துள்ளது.
எஸ் பேங்கின் 20 சதவீத பங்குகளை வாங்க எஸ்.எம்.பி.சி., வங்கி முடிவு செய்துள்ளது. தற்போது 13 சதவீத பங்குகளை வாங்கியுள்ள நிலையில், மீதமுள்ள ஏழு சதவீத பங்குகளை ஆக்சிஸ், பந்தன், பெடரல் உள்ளிட்ட பிற வங்கிகளிடம் இருந்து விரைவில் வாங்க உள்ளது.