'அமெரிக்க அரசின் பணி முடங்கியதால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சு தாமதம்'
'அமெரிக்க அரசின் பணி முடங்கியதால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சு தாமதம்'
ADDED : அக் 08, 2025 01:30 AM

தோஹா:அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால், வர்த்தக பேச்சில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
இந்தியா, அமெரிக்கா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சு, அந்நாட்டில் அரசின் நிர்வாக நடைமுறைகளில் முடக்கம் நீடிப்பதால், தாமதமாகி வருகின்றன.
அமெரிக்காவுடன் ஆறாவது சுற்று பேச்சு விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது. பல்வேறு வழிகளில் இருநாடுகளும் வர்த்தக பேச்சு குறித்த தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன. மற்ற நாடுகளுடன் வர்த்தக பேச்சு சுமுகமாக நடைபெறுகிறது.
ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக பேச்சு நிறைவடைந்து, ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, தோஹாவில் கத்தார் வளர்ச்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி அப்துல் ரஹ்மான் ஹேஷம் அல்-சவைதியை பியுஷ் கோயல் சந்தித்து பேசினார். இந்தியா, கத்தார் இடையே வர்த்தக உறவை மேலும் நெருக்கமாக்க அப்போது இருவரும் விருப்பம் தெரிவித்தனர்.
அமெரிக்காவில், அரசின் பல்வேறு நிதி ஒதுக்கீடு மசோதாக்கள், மருத்துவ காப்பீடு மானியத்துக்கு நிதி விடுவிப்பதில் டிரம்ப் அரசுக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் முரண்பாடு நீடிக்கிறது. மசோதாக்கள் நிறைவேற, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சிலரின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அதை வழங்க ஜனநாயக கட்சி மறுத்து வருகிறது. இதனால், கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக, விசா சேவைகள் உள்ளிட்ட அரசின் பணிகள், ஒரு வாரத்துக்கு மேல் முடங்கியுள்ளன.