ADDED : நவ 10, 2025 11:58 PM

ஓசூர்: டி.வி.எஸ்., நிறுவனம், ஐரோப்பிய சந்தைகளை விரிவுபடுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
தற்போது இத்தாலியில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளுக்கு சந்தையை விரிவுபடுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
இத்தாலியில் நடந்து முடிந்த இ.ஐ.சி.எம்.ஏ., என்ற சர்வதேச இருசக்கர வாகன கண்காட்சியில், டி.வி.எஸ்., பங்கேற்று இருந்தது. அங்கு, அப்பாச்சி ஆர்.டி.எக்ஸ்., அட்வெஞ்சர் டூரர் பைக் உட்பட ஆறுக்கும் மேற்பட்ட பெட்ரோல் மற்றும் மின்சார வாகனங்களை அந்நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் சுதர்ஷன் வேணு கூறியதாவது:
ஆசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட வளரும் சந்தைகளில் இதுவரை அதிக கவனம் செலுத்தி வந்தோம். டி.வி.எஸ்., நிறுவனத்தின் வாகன அணிவகுப்பு தொடர்ந்து வளர்ந்து வருவதால், எங்கள் சந்தையை ஐரோப்பாவில் விரிவுபடுத்த நினைக்கிறோம்.
இத்தாலியை தொடர்ந்து, வளர்ந்த, தொழில்நுட்பத்தில் சிறந்த நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் நுழைய இருக்கிறோம். ஐரோப்பிய சந்தைக்கேற்ற வகையில் மக்களை ஈர்க்கும் புதிய வாகனங்களை அறிமுகம் செய்து, வாடிக்கையாளர்களை நிச்சயம் கவர்ந்து, திருப்தி ஏற்படுத்தி விடுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

