தபால் துறையில் லாபம் ஈட்ட மத்திய அமைச்சர்கள் ஆலோசனை
தபால் துறையில் லாபம் ஈட்ட மத்திய அமைச்சர்கள் ஆலோசனை
ADDED : டிச 28, 2024 10:34 PM

புதுடில்லி:இந்திய தபால் துறையை லாபம் ஈட்டக்கூடியதாக மாற்றுவதற்கான சீர்திருத்தங்கள் குறித்து, இத்துறைக்கான அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பு குறித்து சிந்தியா தெரிவித்திருப்பதாவது:
அதிகமான வாடிக்கையாளர்களை பெறுவதுடன், அவர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது மற்றும் செயல்படும் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட முயற்சிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில், தபால் துறையின் சந்தை பங்கை உயர்த்தவும், வருவாயை அதிகரிக்கவும், தொழில் துறை போட்டிகளை சமாளிப்பதில் கவனம் செலுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்திய தபால் துறையை, உலகளவில் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றவும் முயற்சி எடுக்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சருடனான சந்திப்பில், புதிய மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

