ADDED : ஜூன் 07, 2025 12:35 AM

வங்கிகள், 2.50 லட்சம் ரூபாய் வரை வழங்கும் தங்க நகை கடன்களுக்கு, அடகு வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்க அனுமதிக்கப்படும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நடைமுறையில் 75 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்கப்பட்டு வருகிறது. சிறு கடன் பெறுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, இது 85 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், இந்த 85 சதவீதம் என்பது அசல் மற்றும் வட்டியை உள்ளடக்கியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2.50 லட்சம் ரூபாய் வரை தங்க நகைக் கடன் வாங்குவோரது கடன் திருப்பிச் செலுத்தும் தன்மை ஆராயப்படாது என்றும் தெரிவித்தார்.
விரைவில் வெளியிடப்படவுள்ள தங்க நகை கடன்களுக்கான ரிசர்வ் வங்கியின் இறுதி வழிகாட்டுதல்களில் இவை இணைக்கப்படும் என தெரிவித்த சஞ்சய் மல்ஹோதரா, கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வரைவு விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார். இதனிடையே, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து, தங்க நகை கடன் வழங்குவதில் முக்கிய அங்கமாக விளங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்கு விலை, 2 முதல் 6 சதவீதம் வரை நேற்று அதிகரித்தது.