'இந்திய பால் சந்தையில் அமெரிக்காவால் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும்': எச்சரிக்கும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை
'இந்திய பால் சந்தையில் அமெரிக்காவால் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும்': எச்சரிக்கும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை
ADDED : ஜூலை 15, 2025 06:15 AM

புதுடில்லி: 'நாட்டின் பால், பால் பொருட்கள் சந்தையில் அமெரிக்க வர்த்தகத்தை அனுமதித்தால், அதனை சார்ந்துள்ள இந்திய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 1.03 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்' என எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சில், விவசாயம், பால்வளம் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க பால்வளத்துறைக்கு அதிகளவில் மானியம் அளிக்கப்படுவதால், இந்திய சந்தையில் நுழைய அனுமதிப்பது, இங்குள்ள சிறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விடும்.
மேலும், அமெரிக்க நிறுவனங்களை அனுமதிப்பதால், சந்தைக்கு கூடுதல் வரத்தால், இந்தியாவில் பால் விலை 15 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 1.03 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்.
இந்தியாவின் பால் இறக்குமதி ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2.50 கோடி டன்களாக அதிகரிக்கும். இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய ஆதாரமாக விளங்கும் பால்வளத்துறை, தேசிய மொத்த மதிப்பு கூட்டலில், 2.5 - 3 சதவீதம் பங்களிப்பை வழங்குகிறது.
பால்வளத்தில் மொத்த சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட 7.50 முதல் 9 லட்சம் கோடி ரூபாயை அளிக்கிறது.
ஒவ்வொரு 1 லட்சம் ரூபாய் மதிப்பு கூட்டல் பங்களிப்புக்கு, ஒரு நபர் வீதம் நேரடியாக 8 கோடி பேருக்கு வேலை வழங்கி வருகிறது. 15 சதவீதம் அளவுக்கு பால் விலை குறைவது, விவசாயிகள் மட்டுமின்றி, பொருளாதாரத்தில் பால்வளத்துறையின் பங்களிப்பை பலவீனமடைய செய்யும்.
உள்ளீட்டு செலவுகளான தீவனம், எரிபொருள் மற்றும் போக்குவரத்து, சம்பளம் இல்லாத குடும்ப உறுப்பினர் ஆகியவற்றை கணக்கில் கொண்டால், மொத்த மதிப்பு கூட்டலில் நஷ்டம் 0.51 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.