ADDED : பிப் 26, 2024 12:14 AM

முதலீடு வாய்ப்புகளை தேர்வு செய்யும் போது, நிதி இலக்கு, முதலீடு பலன், இடர், வரி சலுகை உள்ளிட்ட அம்சங்களை கவனத்தில் கொள்வது அவசியம். இந்த வரிசையில் முதலீடு தொடர்பான ஆவணங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஆவணங்களை தாக்கல் செய்யும் போது அளிக்கும் தகவல்களில் தவறுகள் அல்லது வேறுபாடு இருந்தால், முதலீட்டை விலக்கி கொள்ளும் போது சிக்கல் ஏற்படலாம். தகவல் பிழை காரணமாக முதலீடு பலன் நிறுத்தி வைக்கப்படும் அபாயம் கூட உள்ளது. எனவே, முதலீடு தொடர்பான ஆவணமாக்கலில் உரிய கவனம் செலுத்த வேண்டும். அதற்கான வழிகளை பார்க்கலாம்.
துல்லியம் அவசியம்:
முதலீடுகள் தொடர்புடைய கட்டுப்பாடு அமைப்புகளின் விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டவை. சட்டப்பூர்வமான தேவைகளை நிறைவேற்ற முறையான ஆவணங்கள் அவசியம். ஆவணங்களில் ஏதேனும் தகவல் பிழை இருந்தால், முதலீடு பயணம் சிக்கலாகலாம்.
அடையாளம்:
ஆவணங்கள் முதலீட்டாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துகின்றன. கே.ஒய்.சி., நடைமுறை தீவிரமாக இருப்பதால், பிழையான தகவல்கள், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வழி வகுக்கலாம். ஆவணங்களே நிதி பரிவர்த்தனைகளுக்கான முதன்மை அடையாளமாக அமைவதால், தகவல்கள் சரியாக இல்லை எனில் பரிவர்த்தனையில் சிக்கல் உண்டாகலாம்.
வரி பாதிப்பு:
முதலீடு ஆவணங்களில் சரியான தகவல்கள் இடம்பெற்றிருப்பது, வருமான வரி தாக்கலின்
போது பாதிப்பை ஏற்படுத்தலாம். வரிச்சலுகை கோருவதையும் இது பாதிக்கலாம். முகவரியில் பிழை இருந்தால், உரிய நேரத்தில் தகவல் தொடர்பு கிடைக்காமல் போகலாம்.
ஆய்வு தேவை:
முதலீடு செய்யும் போது, ஆவணங்களை கவனமாக சரி பார்த்து அளிக்க வேண்டும். மேலும் அடிக்கடி ஆவணங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்து, ஏதேனும் பிழைகள் இருந்தால், அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல்கள் அளிப்பதற்கான சரியான
நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
ஆவணமாக்கல்:
ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பணம் செலுத்திய ரசீது போன்றவற்றை பாதுகாக்க வேண்டும். விதிமுறைகள் தொடர்பாக ஏதேனும் மாற்றம் கொண்டு வரப்பட்டால் அதை அறிந்து நிறைவேற்ற வேண்டும். ஆவணங்களை வெறும் நடைமுறையாக மட்டும் அல்லாமல், முதலீடு பயணத்தின் முக்கிய அம்சமாக கருத வேண்டும்.

