உங்கள் குரல் தொழில் சிக்கலும்...தீர்வுக்கான கோரிக்கையும்...
உங்கள் குரல் தொழில் சிக்கலும்...தீர்வுக்கான கோரிக்கையும்...
UPDATED : அக் 28, 2026 03:17 PM
ADDED : அக் 28, 2026 03:14 PM

மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும்!
திருச்சி | தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு
என்ன பிரச்னை?
தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். குவாரிகள் செயல்படாததால் மணல் போக்குவரத்து தொழில் பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
யாருக்கு பாதிப்பு?
மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மணல் போக்குவரத்தை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அரசிடம் கோருவது என்ன?
மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறந்து, மணல் போக்குவரத்தை தொடங்க வேண்டும். இதன் வாயிலாக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலவை உப்பை மீண்டும் பயன்படுத்த அனுமதி வேண்டும்!
திருப்பூர் | காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள்
என்ன பிரச்னை?
திருப்பூர் காசிபாளையம் பொது சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பின்போது கலவை உப்பு கிடைக்கிறது. இதனை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி தேவைப்படுவதாக நிலைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஏன் முக்கியம்?
சுத்திகரிப்பு பணியில் உருவாகும் கலவை உப்பின் அளவை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், மீதமுள்ள உப்பை மறுபயன்பாட்டுக்கு கொண்டு வர ஒழுங்குமுறை அனுமதி அவசியமாக உள்ளது. இதற்கான விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அரசிடம் கோருவது என்ன?
கலவை உப்பை உரிய முறையில் சுத்திகரித்து, மீண்டும் பயன்படுத்த மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை விரைவாக பெற்றுத்தர வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
