ஏற்கனவே செலுத்திய காப்பீடுக்கான ஜி.எஸ்.டி., திரும்ப கிடைக்குமா?
ஏற்கனவே செலுத்திய காப்பீடுக்கான ஜி.எஸ்.டி., திரும்ப கிடைக்குமா?
ADDED : டிச 08, 2025 01:59 AM

மருத்துவக் காப்பீடுகளுக்கு, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் மொத்தமாக சேர்த்து பணம் செலுத்தி இருக்கின்றனர். நடப்பாண்டுக்கு மட்டும் ஜி.எஸ்.டி., 18 சதவீதம் எடுத்துக் கொண்டாலும், மீதமுள்ள ஆண்டுகளுக்கான ஜி.எஸ்.டி., திரும்ப கிடைக்குமா?
- ப.வெங்கடேஸ்வர பூபதி, கோவை
உங்களது சந்தேகம் மிக சரியானது, முக்கியமானது. இதற்கான பதில் எளிமையாக தோன்றினாலும், நடைமுறையில் சில சிக்கல்கள் உள்ளன.
ஜி.எஸ்.டி., நிபுணர்களின் கருத்துபடி, காப்பீட்டு நிறுவனம் பணத்தை திருப்பித் தர வேண்டும். காரணம், பல ஆண்டு காப்பீடுக்கு பணம் செலுத்தும்போது, ஒவ்வொரு ஆண்டிலும் கிடைக்கும் சேவைக்காகவே, வாடிக்கையாளர் கட்டணம் செலுத்துகிறார்; முழு சேவையும் ஆரம்பத்திலேயே கிடைப்பதில்லை.
ஆனால், காப்பீட்டு நிறுவனங்களின் பார்வையில், சேவை முழுமையாக வழங்கப்பட்டதாகவும், அதற்கான முழு ஜி.எஸ்.டி.,யையும் அவர்கள் அரசுக்கு ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும் கூறுகின்றனர்.
இப்போது, இந்த பிரச்னைக்குத் தீர்வு காண காப்பீட்டு நிறுவனங்கள் ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,யை அணுக முயற்சிக்கின்றன. அதை, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அரசு தரப்புடன் விவாதிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, வாடிக்கையாளர்கள் முடிவுக்காக இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
ஆண்டுக்கு, 12 ரூபாய் கட்டும் பிரதமரின் விபத்து காப்பீட்டை எப்படி பெறுவது?
மின்னஞ்சல்
'பிரதமரின் ஜன் தன் யோஜனா'வில் 'நான்கு காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. இதில், நீங்கள் குறிப்பிட்ட ஆண்டுக்கு 12 ரூபாய் திட்டம் என்பது, ஓராண்டுக்கான தனிநபர் விபத்து காப்பீடு.
இந்த காப்பீட்டிற்கு, கட்டணம் 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விபத்தால் ஏற்படும் மரணம் அல்லது ஊனமுற்ற நிலைக்கு, அதிகபட்சம் 2,00,000 ரூபாய் வரை பாதுகாப்பு கிடைக்கும்.
இந்த திட்டத்தில் சேருவது எளிது. உங்கள் வங்கி அல்லது தபால் நிலையத்துக்குச் சென்று, ஒரு பக்க படிவத்தை பூர்த்தி செய்து, ஆதார் இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்கில் இருந்து காப்பீட்டு கட்டணத்தை ஆண்டுதோறும் கழிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
இதை, ஆன்லைனிலும் செய்ய முடியும். ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதத்தில் உங்கள் கணக்கிலிருந்து கட்டணம் தானாகக் கழிக்கப்படும். காப்பீட்டு ஆண்டு ஜூன் முதல் மே மாதம் வரை இயங்கும்.
நீங்கள் ஆண்டின் நடுவில் சேர்ந்தாலும், முழுக் கட்டணத்தையே செலுத்த வேண்டும். 18 முதல் 70 வயது வரை யாரும், தங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்கின் வாயிலாக இந்த திட்டத்தில் சேரலாம்.
விபத்து மரணம் அல்லது முழு ஊனமுற்ற நிலை என்றால் 2,00,000 ரூபாயும், ஒரு கண் பார்வையை முழுமையாக இழந்தால் அல்லது ஒரு கை, காலை பயன்படுத்த முடியாத நிலையிலான பகுதி ஊனத்திற்கு 1,00,000 ரூபாயும் வழங்கப்படும்.
இவைதவிர, பிரதமரின் 'ஜீவன் ஜ்யோதி பீமா யோஜனா' திட்டம் என்பது ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டம். 18 - 50 வயதுக்குள் உள்ளவர்களுக்கு, 2,00,000 ரூபாய் காப்பீடு பாதுகாப்பு கிடைக்கும். ஆண்டு கட்டணம் 436 ரூபாய்.
'அடல் பென்ஷன்' திட்டம் என்பது வருமான வரி செலுத்தாதவர்களுக்கான ஓய்வூதிய திட்டம். 18 - 40 வயது வரை சேரலாம். 60 வயது முடிவில் தொடங்கி, மாதம் 1,000 முதல் 5,000 ரூபாய் வரை என விருப்பத்திற்கேற்ப ஓய்வூதியம் கிடைக்கும்.
அதன்பின், வாழ்க்கை துணைக்கு குடும்ப ஓய்வூதியம்; இறுதியில் சேமித்த தொகை நாமினிக்கு திருப்பி வழங்கப்படும். காப்பீடில் சேரும் வயது, தேர்ந்தெடுத்த மாதாந்திர பென்ஷன் அளவை பொறுத்து பிரீமியம் மாறும். 60 வயது வரை மாதாந்திரமாக பணம் செலுத்த வேண்டும்; பின் ஓய்வூதியம் துவங்கும்.
மேலும், பிரதமரின் ஜன் தன் யோஜனா கணக்குகளுக்கு, உள்ளமைக்கப்பட்ட விபத்து காப்பீட்டு பாதுகாப்பும் உள்ளது. 2018 ஆகஸ்ட் 28-க்கு பின் திறக்கப்பட்ட கணக்குகளுக்கு 2,00,000 லட்சம் ரூபாய், அதற்கு முன் திறக்கப்பட்ட கணக்குகளுக்கு 1,00,000 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.

