250 ரூபாயில் 'சோட்டி' எஸ்.ஐ.பி., தரவுகள் ஜனவரியில் வெளியாகிறது
250 ரூபாயில் 'சோட்டி' எஸ்.ஐ.பி., தரவுகள் ஜனவரியில் வெளியாகிறது
ADDED : நவ 16, 2025 12:59 AM

மியூச்சுவல் பண்டுகளில், மாதம் 250 ரூபாய் முதலீடு செய்யும் 'சோட்டி' எஸ்.ஐ.பி.,களை எவ்வளவு பேர் பயன்படுத்துகின்றனர்; எந்த நிறுவனங்களில் அதிக முதலீடு வருகிறது என்பது போன்ற அடிப்படை விபரங்களை, வரும் ஜனவரி மாதம், பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிட உள்ளதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான 'ஆம்பி' தெரிவித்துள்ளது.
இதற்காக, ஆர்.டி.ஏ., எனப்படும் பதிவாளர்கள் மற்றும் பரிமாற்ற முகவர்கள், தங்களுடைய கணினி அமைப்புகளை மேம்படுத்தி, ஒவ்வொரு 'சோட்டி' எஸ்.ஐ.பி., களையும் கண்காணிக்க ஒரு மென்பொருளை உருவாக்கி வருவதாகவும் ஆம்பி தெரிவித்துள்ளது.
சிறு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, இந்த குறைந்த தொகையில் எஸ்.ஐ.பி., முதலீடை மேற்கொள்வதற்கான வாய்ப்பை செபி அறிவித்தது.
இந்த திட்டத்தை, முதலீட்டாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வினியோகஸ்தர்களுக்கு, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சில நிபந்தனைகளுடன் 500 ரூபாய் ஊக்கத் தொகையை வழங்குகின்றன.
இந்நிலையில், பெரும் பாலான நிறுவனங்கள் தங்களின் ஆர்.டி.ஏ.,க்கள், 'சோட்டி' எஸ்.ஐ.பி.,க்களை கண்காணிக்கும் மென்பொருளை வழங்குவதற்காக காத்திருப்பதாக, ஆம்பியின் தலைமை செயல் அதிகாரி வெங்கட் சலசானி தெரிவித்துள்ளார்.
மென்பொருள் தயாரானவுடன், வரும் டிசம்பரில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஜனவரி மாதம் பொதுவெளியில் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

