' டிமேட் 2.0' தொழில்நுட்ப மயமாகும் கடன் பத்திர முதலீடு
' டிமேட் 2.0' தொழில்நுட்ப மயமாகும் கடன் பத்திர முதலீடு
UPDATED : செப் 12, 2026 03:41 AM
ADDED : செப் 12, 2026 03:36 AM

மூலதன சந்தையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும் வகையில், கார்ப்பரேட் கடன் பத்திரங்களை டிஜிட்டல் டோக்கன்களாக மாற்றும் 'டிமேட் 2.0' திட்டத்தை சோதனை ஓட்டமாக செபி அறிமுகப்படுத்தியுள்ளது .
'டி.எல்.டி.,' எனப்படும் வினியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் வாயிலாக கார்ப்பரேட் கடன் பத்திரங்களை டிஜிட்டல் டோக்கன்களாக மாற்றி, அவற்றை வெளியிடுவதும், வைத்திருப்பதும், வர்த்தகம் செய்வதுமே இதன் முக்கிய நோக்கம்.
செட்டில்மென்ட் இத்திட்டத்தில் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம், முதிர்வு காலம் ஆகியவை 'ஸ்மார்ட் ஒப்பந்தங்கள்' வாயிலாக கணினி குறியீடுகளாக பதியப்படுகின்றன. இதனால், வட்டி மற்றும் அசல் தொகை குறிப்பிட்ட தேதியில் தானாகவே முதலீட்டாளர்களின் கணக்குக்கு சென்றுவிடும்.
மேலும், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்தப்படுவதால், பத்திரமும் பணமும் ஒரே நொடியில் செட்டில்மென்ட் செய்யப்படும். ஒருவேளை பண பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பத்திர பரிவர்த்தனையும் ரத்தாகிவிடும் என்பதால், செட்டில்மென்ட் தொடர்பான அபாயங்கள் தவிர்க்கப்படுகின்றன.
டிமேட் முதலீட்டாளர்கள் இதற்காக புதிய டிமேட் கணக்கு தொடங்க தேவையில்லை. வழக்கமான டிமேட் கணக்கிலேயே இந்த வசதியை இணைத்து கொள்ளலாம். 'பிளாக்செயின் பிரைவேட் கீ'களை டிபாசிட்டரிகளே நிர்வகிப்பதால், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் தொழில்நுட்ப சுமையும் இருக்காது.
1 நிறுவன முதலீட்டாளர்களுக்கான பத்திர வெளியீடு மற்றும் ஸ்மார்ட் ஒப்பந்த சேவைகள்
2 இரண்டாம் நிலை சந்தை வர்த்தகம் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு அனுமதி
3 கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள் மற்றும் பங்கு தரகர்களை நெட்வொர்க்கில் இணைத்து, பிற நிதி சொத்துக்களுக்கு விரிவாக்கம் செய்வது.
