பண்டமென்டல் அனாலசிஸ் : வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் மாருதி சுசூகி
பண்டமென்டல் அனாலசிஸ் : வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் மாருதி சுசூகி
UPDATED : செப் 14, 2025 01:33 AM
ADDED : செப் 14, 2025 01:23 AM

கடந்த இரண்டு ஆண்டுகளாக, வாகனத் துறை இரு முக்கியமான சவால்களை சந்தித்து வந்தது. கார்களின் விலை அதாவது, மக்களின் வாங்கும் திறன் மற்றும் பணப்புழக்கம். இந்த இரு பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முக்கியமான சீர்திருத்தங்களை சமீபத்தில் எடுத்துள்ளன. ஒன்று ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பு மற்றொன்று பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள். இந்த இரண்டு நடவடிக்கைகளும் இந்த துறையை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
![]() |
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு வாயிலாக, பயணியர் வாகன பிரிவில் சிறிய ரக ஹேட்ச்பேக் கார்கள் மற்றும் எஸ்.யு,வி., கார்கள் மிகுந்த பயனை அடைய வாய்ப்புள்ளது.
முன்னதாக, சிறிய ரக கார்களுக்கு அதாவது, 1,200 சி.சி.,க்கும் குறைவான பெட்ரோல் கார்கள் மற்றும் 1,500 சி.சி.,க்கும் குறைவான டீசல் கார்களுக்கு, 29 சதவீதத்திலிருந்து 31 சதவீதம் வரை, ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு வந்தது. தற்போது, இது 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பெரிய கார்களுக்கு, முன்னதாக 50 சதவீதமாக வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார்களுக்கான வரியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த வரி சீர்த்திருத்தங்கள் வாயிலாக, மாருதி சுசூகி நிறுவனம் அதிக பயனடைய வாய்ப்புள்ளது.
கடந்த ஓராண்டில் நடந்த ரிசர்வ் வங்கியின் தொடர் வட்டி குறைப்பு நடவடிக்கைகள், கார் வாங்குபவர்களின் தவணைத் தொகையை கணிசமாக குறைத்திருக்கிறது.
மேலும், கடந்த பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட தனிநபர் மற்றும் வருமான வரி சலுகைகள், நுகர்வோரின் வாங்கும் திறனை அதிகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் தொடர்ந்து நிலவும் குறைவான பணவீக்கம், ஒட்டுமொத்த நுகர்வை கூட்டக்கூடிய அம்சமாக அமையும். இவை அனைத்துமே கொள்கை சார்ந்த சாதகமான நடவடிக்கைகளாக அமையக்கூடும்.
![]() |
ஜி.எஸ்.டி., மாற்றமும் சிறிய ரக கார்களும்
இந்தியாவில் முதல் முறை கார் வாங்குபவர்களின் தேர்வாக பெரும்பாலும் சிறிய ரக கார்களே இருந்து வந்துள்ளன. ஆனால், விலை சிக்கல் மற்றும் மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றால், சிறிய ரக கார்களின் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டு வந்தது.
மாருதி சுசூகி நிறுவனத்தை பொறுத்தவரை, சிறிய ரக கார்கள் பிரிவில் 68 சதவீத சந்தையுடன் முன்னணியில் இருக்கிறது. தற்போது வரி குறைப்பால் 11- - 13 சதவீதம் சிறிய ரக கார்களின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.
பெரிய ரக கார்கள் மற்றும் எஸ்.யு.வி., கார்களின் விலை 5 -- 10 சதவீதம் விலை குறைப்பை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. இந்த விலை குறைப்பு வாயிலாக மாருதி சுசூகியின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வேகமெடுக்கும் எலக்ட்ரிக் கார்கள்
கடந்த ஆகஸ்ட் மாதம், 'இ-விட்டாரா' என்ற எலக்ட்ரிக் காரை, மாருதி சுசூகி அறிமுகப்படுத்தியது. மேலும் எலக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 22 பில்லியன் ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.
2025- - 2026ம் நிதியாண்டில் 67,000 இ-விட்டாரா கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. முதற்கட்டமாக, ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய கார்களை அறிமுகப்படுத்த திட்டம்
மாருதி சுசூகி நிறுவனம், கடந்த சில தினங்களுக்கு முன் 'விக்டோரிஸ்' என்ற எஸ்.யூ.வி., காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் இந்நிறுவனத்தின் இப்பிரிவில் முக்கிய தயாரிப்பாக பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மற்றும் கியா நிறுவனத்தின் செல்டோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக, விக்டோரிஸ் காரை மாருதி சுசூகி அறிமுகப்படுத்தியுள்ளது. கிரெட்டாவும் செல்டோஸும் மாதம் 20,000 யூனிட்கள் விற்பனையாகின்றன.
அதிகரிக்கும் ஏற்றுமதி
மாருதி சுசூகி நிறுவனம் தனது ஏற்றுமதி சந்தையை வேகமாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. 2025 - -26ம் நிதியாண்டில் ஏற்றுமதிக்கு 20 சதவீத வளர்ச்சியை இலக்காக நிர் ணயித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல்; வரும் 2031ம் நிதியாண்டில், 7,50,000 யூனிட் கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக, 15 சதவீத வருடாந்திர வளர்ச்சியை எட்ட முடியும் என்று கணிக்கப்படுகிறது.
தற்போது இந்நிறுவனத்துக்கு மூன்று அம்சங்கள் சாதகமாக உள்ளன. ஒன்று விக்டோரிஸ், இரண்டாவதாக எஸ்.௸ய.வி., பிரிவை பலப்படுத்தி வருவது, மூன்றாவதாக ஜி.எஸ்.டி., மாற்றம்.
இதுமட்டுமல்லாமல்; தனிநபர் வருமான வரியில் மாற்றம் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி எடுத்துவரும் நடவடிக்கைகள் என, இந்நிறுவனத்துக்கு சாதக அம்சங்கள் அதிகமாக உள்ளன. இதனால், மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
தற்போது மாருதி சுசூகி 2026 - -27ம் நிதியாண்டில் எதிர்பார்க்கும் ஒரு பங்குக்கான லாபத்தை (இ.பி.எஸ்.,) விட 28 மடங்கு (பி.இ.,குறியீடு) என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு பங்கு லாபத்தை (இ.பி.எஸ்.,) விட 28 மடங்கு (பி.இ., குறியீடு) என்ற அளவிலேயே வர்த்தகமாகி வந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறந்த நிறுவன பங்கை, சாதகமான மதிப்பீட்டில் வாங்குவது முதலீட்டாளரின் நோக்கமாக இருக்க வேண்டும்.
அந்த வகையில், சந்தையின் இறக்கத்தின் போது, மாருதி சுசூகி நிறுவனத்தை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளலாம்.