sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 ஓய்வுக்கால சேமிப்புக்கு வரி உண்டா?

/

 ஓய்வுக்கால சேமிப்புக்கு வரி உண்டா?

 ஓய்வுக்கால சேமிப்புக்கு வரி உண்டா?

 ஓய்வுக்கால சேமிப்புக்கு வரி உண்டா?


ADDED : பிப் 16, 2026 01:38 AM

Google News

ADDED : பிப் 16, 2026 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த சில வாரங்களாக பல்வேறு ஓய்வுக்கால சேமிப்புகள் பற்றி தெரிவித்தேன். எல்லோருக்கும் சில சந்தேகங்கள் உண்டாகியிருக்கும். ஓய்வுபெறும் நாளன்று, நம் கையில் கிடைக்கும் மொத்தப் பணத்திற்கும் வரி உண்டா? அல்லது முழுப் பணமும் நமக்கே சொந்தமா? எந்த ஓய்வுகாலச் சேமிப்புக்கு என்ன வரி விகிதம் பொருந்தும்? எதைத் தேர்வு செய்வது?

பல முதலீட்டாளர்கள், 'ஓய்வுக்கால பணத்துக்கு தான் வரிச்சலுகை இருக்கிறதே' என்று போதிய விவரம் தெரியாமல் நம்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மை அதுவல்ல! ஒவ்வொரு வகையான சேமிப்புக்கும் வெவ்வேறு வரி விதிமுறைகள் உள்ளன.

பணிக்கொடை



பணி ஓய்வு பெறும்போது ஊழியருக்கு கிடைக்கும் மிக முக்கியமான பெருந்தொகை கிராஜூவிட்டி. பல்வேறு எதிர்காலத் திட்டங்களுக்கான நிதி ஆதாரம் இதுவாகத் தான் இருக்கும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் முழு கிராஜூவிட்டி தொகையும் வரிக்கு உட்பட்டதல்ல. அதாவது, இந்தப் பணத்துக்கு எந்த வரியும் செலுத்த வேண்டாம்.

தனியார் ஊழியர்கள் விஷயத்தில் தான் ஒரு முக்கியமான திருத்தத்தை கவனிக்க வேண்டும். புதிய வரி முறையின்படி, வரி விலக்கு வரம்பு குறைவாக இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர்.

ஆனால், தற்போதைய விதிகளின்படி, பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் வரும் தனியார் ஊழியர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கிராஜூவிட்டிக்கு வரி விலக்கு உண்டு. இது பழைய மற்றும் புதிய வரி முறை ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். 20 லட்சத்திற்கு மேல் பெறும் தொகைக்கு மட்டுமே உங்கள் வருமான வரி வரம்பிற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.

விடுப்பு ஒப்படைப்புத் தொகை பலர் கவனிக்கத் தவறும், ஆனால் அதிக லாபம் தரக்கூடிய ஒரு பிரிவு இது. பணியில் இருக்கும்போது நாம் எடுக்காத விடுப்பு நாட்களைச் சேர்த்து வைத்து, ஓய்வுபெறும்போது அதை பணமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

அரசு ஊழியர்கள் விஷயத்தில், முழுத் தொகைக்கும் வரி விலக்கு உண்டு.

தனியார் ஊழியர்களுக்கு முன்பு மூன்று லட்சம் ரூபாய் வரை மட்டுமே வரி விலக்கு இருந்தது. ஆனால், 2023 பட்ஜெட் அறிவிப்பின்படி, இந்த வரம்பு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது தனியார் ஊழியர்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதம். எனவே, ஓய்வுக்காலத் திட்டமிடலில் இந்தக் கூடுதல் சலுகையைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஓய்வூதியம்


ஓய்வூதியத்தில் இரண்டு வகைகள் உள்ளன.நீங்கள் அரசு ஊழியரோ, தனியார் ஊழியரோ, மாதந்தோறும் வாங்கும் பென்ஷன் தொகையானது, உங்கள் சம்பளமாகவே கருதப்படும். இதற்கு முழுமையாக வரி செலுத்த வேண்டும்.

ஓய்வு பெறும் போதும் ஓய்வூதியத்தில் ஒரு பகுதி பணத்தை மொத்த தொகையாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இது. இதை 'கம்யூனிடட் பென்ஷன்' என்று சொல்வார்கள்.

அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, இந்தத் தொகை முழுமையும் வரி விலக்கு பெற்றது.

தனியார் ஊழியர்கள் கிராஜூவிட்டி தொகை பெற்றிருந்தால், மூன்றில் ஒரு பங்கு பென்ஷன் தொகைக்கு வரி விலக்கு உண்டு. கிராஜூவிட்டி பெறாதவர் என்றால், பாதியளவு தொகைக்கு வரி விலக்கு உண்டு.

குடும்ப ஓய்வூதியம் ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், அவர் குடும்பத்திற்கு வழங்கப்படும் தொகை இது. இந்தத் தொகையானது 'பிற வருமானங்கள்' என்ற தலைப்பில் வரும்.

குடும்ப ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கு அல்லது 15,000 ரூபாய் ஆகியவற்றில் எது குறைவோ, அத்தொகைக்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கும். மீதமுள்ள தொகைக்கு வரி கட்ட வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி


இந்த இ.பி.எப்., ஒரு பாதுகாப்பான முதலீட்டுக்கான வழிமுறை.

நீங்கள் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய பிறகு எடுக்கும் இ.பி.எப் தொகைக்கு (அசல் + வட்டி) முழுமையான வரி விலக்கு உண்டு.

ஆனால், ஓய்வுபெற்ற பிறகு, நீங்கள் அந்தப் பணத்தை எடுக்காமல் கணக்கிலேயே வைத்திருந்தால், ஓய்வுபெற்ற நாளுக்குப் பிறகு அந்தப் பணம் ஈட்டும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.

மேலும், ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தும் ஊழியர் பங்களிப்புக்கு கிடைக்கும் வட்டிக்கு, 2021ம் ஆண்டிலிருந்து வரி விதிக்கப்படுகிறது.

தேசிய பென்ஷன் திட்டம்


என்.பி.எஸ்., பற்றி கடந்த வாரம் விரிவாக பார்த்தோம். பலரும் முதலீடு செய்துவரும் இந்தத் திட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் சலுகைகள், விலக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள நிலையில், இந்தத் திட்டத்தில் சேகரமாகும் தொகையில் 60 சதவீதம்வரை கையில் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு வரி கிடையாது.

மீதமுள்ள 40 சதவீதத் தொகையை, கட்டாயமாக ஒரு ஆனுவிட்டி திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

இந்த 40 சதவீத தொகைக்கு வரி இல்லை. ஆனால், அதன் வாயிலாக மாதந்தோறும் வரும் பென்ஷன் தொகைக்கு வரி உண்டு.

பொது வருங்கால வைப்பு


நிதி ஓய்வுக்காலத்திற்கு சிறுகச் சிறுக சேமிக்கச் சிறந்த திட்டம் தான் இந்த பி.பி.எப். இது ஈ.ஈ.ஈ., என்ற அந்தஸ்து பெற்றது. அதாவது மூன்று நிலையிலும் இதற்கு வரிவலக்கு உண்டு.

அதாவது முதலீடு செய்யும் தொகைக்கு வரிச்சலுகை உண்டு. இதில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு வரி இல்லை. முதிர்வுத் தொகைக்கும் ஒரு ரூபாய் கூட வரி கிடையாது.

மேலே சொல்லப்பட்டவற்றில், இ.பி.எப்., பி.பி.எப். ஆகியவை தான் வரிச் சேமிப்பில் மிகச் சிறந்த முதலீட்டு இனங்கள். பென்ஷனும், என்.பி.எஸ்.ஸில் உள்ள ஆனுவிட்டி தொகைக்கும் ஆண்டுதோறும் வரி கட்ட வேண்டும்.

ஓய்வுக்கால வருவாய் இனங்களைத் திட்டமிடும் போது, கொஞ்சம் வேறு மாதிரி யோசியுங்கள். வரி சேமிப்பின் அடிப்படை விதி ஈ.ஈ.ஈ., திட்டம் தான். அதாவது முதலீடு, வட்டி, முதிர்வுத் தொகை ஆகிய மூன்றிற்கும் வரி இல்லாத திட்டங்கள் தான் முக்கியமானவை. அப்படிப் பார்த்தால், பி.பி.எப்., மற்றும் இ.பி.எப்., தான் சாத்தியம்.

ஓய்வுபெறும் வரை உங்களின் பி.பி.எப்., கணக்கை மூடாதீர்கள். முடிந்தவரை அதை 5 ஆண்டுகள் வீதம் நீட்டித்துக்கொண்டே செல்லுங்கள். ஏனெனில், இதிலிருந்து வரும் பணத்துக்கு நுாறு சதவீதம் வரி கிடையாது. அவசரத் தேவைக்கு இதில் எடுக்கும் பணம் உங்கள் வருமான வரம்பை உயர்த்தாது.

அதேபோல், என்.பி.எஸ்.ஸில் இருந்து எடுக்கும் 60 சதவீதத் தொகைக்கு வரி கிடையாது. அதை எடுத்துக்கொண்டு போய் பிக்சட் டெபாசிட்டில் போடாதீர்கள். கடன் பத்திர பண்டுகள் அல்லது மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்களில் போடுங்கள். மியூச்சுவல் பண்டில் உள்ள சிஸ்டமேடிக் வித்டிராயல் திட்டம் என்ற முறையைப் பயன்படுத்துங்கள்.

ஏனெனில், பிக்சட் டெபாசிட் ஈட்டும் வட்டிக்கு வரி உண்டு. ஆனால், ஈக்விட்டி மியூச்சுவல் பண்டிலிருந்து எடுக்கும் பணத்திற்கு 'நீண்ட கால மூலதன ஆதாய வரி' வெறும் 12.50% மட்டுமே. வருடத்திற்கு 1.25 லட்சம் ரூபாய் வரை விலக்கு உண்டு. இது மிகப்பெரிய வரி சேமிப்பைத் தரும்.






      Dinamalar
      Follow us