
நிதி அமைச்சக அதிகாரிகளை சந்தித்த காப்பீடு அதிகாரிகள்
ப ல்வேறு காப்பீடு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், நேற்று மத்திய நிதியமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தினர்.
அப்போது, சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., அடுக்குகள் தொடர்பான தங்களது கருத்துகளை அவர்கள் தெரிவித்ததாகவும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்ததாகவு ம் கூறப்படுகிறது. ஜி.எஸ்.டி., மாற்றங்களை முன்தேதியிட்டு செயல்படுத்தப்படக் கூடாது; புதுப்பிக்கப்படும் பாலிசிகளுக்கு உள்ளீட்டு வரிப் பயன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
தனியார் பங்கு முதலீட்டின் தலைநகரமாகிறது இந்தியா
ஆ சியாவின் தனியார் ஈக்விட்டி முதலீட்டு தலைநகரமாக இந்தியாவை மாற்ற, உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனங்களான கே.கே.ஆர்., அண்டு கோ., முதல், பிளாக்ஸ்டோன் வரை முதலீடுகளை குவித்து வருகின்றன.
ஏழு உலகளாவிய முக்கிய நிதி மேலாண்மை நிறுவனங்கள், அவற்றின் முக்கிய தலைமைப் பொறுப்புக்கு மும்பையை சேர்ந்தவர்களை நியமித்து உள்ளன. இவர்கள் 8.60 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகித்து வருகின்றனர். சீனாவை தாண்டி உலகளாவிய முதலீடுகள், இந்தியாவின் வலுவான பொருளாதார விரிவாக்கம், பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் காரணமாக குவிந்து வருகின்றன.
இரண்டாவது நாளாக ஐ.டி., பங்குகள் உயர்வு
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சு தொடர்பான டிரம்பின் விளக்கம், பெடரல் ரிசர்வ் வட்டியை குறைக்கும் என நம்பிக்கை அதிகரிப்பு ஆகியவற்றின் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தையில் நேற்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஐ.டி., துறை பங்குகள் உயர்வு கண்டன. நேற்றைய வர்த்தக நேர முடிவில், ஆரக்கிள் பைனான்சியல் சர்வீசஸ் சாப்ட்வேர் பங்கு 10 சதவீதமும், பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் பங்கு 6 சதவீதமும், கோபோர்ஜ் 4 சதவீதமும், விப்ரோ, எச்.சி.எல்.,டெக் தலா 3 சதவீதமும் உயர்வுடன் நிறைவு செய்தன. இதனால், நிப்டி ஐ.டி., குறியீடு 2.63 சதவீதம் உயர்ந்தது.