கோல்டு இ.டி.எப்., திட்டங்களுக்கு 'நிப்பான் இந்தியா' கட்டுப்பாடு
கோல்டு இ.டி.எப்., திட்டங்களுக்கு 'நிப்பான் இந்தியா' கட்டுப்பாடு
ADDED : ஜூன் 09, 2026 03:56 AM

'நிப்பான் இந்தியா இ.டி.எப்., கோல்டு பீஸ் மற்றும் நிப்பான் இந்தியா கோல்டு சேவிங்ஸ் பண்டு' ஆகிய தங்களது இரு தங்க முதலீட்டு திட்டங்களுக்கு, 'நிப்பான் இந்தியா மியூச்சுவல் பண்டு' நிறுவனம் தற்காலிக கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இது, ஜூன் 8 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
1 பெரிய முதலீட்டாளர்கள் இனி நேரடியாக, நிறுவனத்தின் வாயிலாக புதிய முதலீடுகளை மேற்கொள்ள முடியாது
2 மொத்த முதலீடாக இனி ஒரு பான் கார்டுக்கு, ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய முடியும்
3 எஸ்.ஐ.பி., மற்றும் எஸ்.டி.பி., முறைகளில் தினமும் அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை முதலீடு செய்ய அனுமதி.
ரூ.1,398 கோடி போனஸ்; 'கோட்டக்' அறிவிப்பு
'கோ ட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம், 2025 - 26ம் நிதியாண்டிற்காக தன் பாலிசிதாரர்களுக்கு 1,398 கோடி ரூபாய் போனஸ் அறிவித்துள்ளது. தகுதியான பாலிசிதாரர்களுக்கு இந்த போனஸ் தொகை, பாலிசி முதிர்வு காலத்திலோ அல்லது இறப்புரிமை கோரலின் போதோ வழங்கப்படும் எனவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.
முக்கிய அம்சங்கள்
1 இது, முந்தைய ஆண்டை விட 18.70 சதவீதம் அதிகம்
2 பாலிசிதாரர்கள் போனஸ் பெறுவது, இது 25வது ஆண்டு
3 இதன் வாயிலாக 7.70 லட்சம் பாலிசிதாரர்கள் பயனடைவர்.
'அப்பர் சர்க்யூட்' அடித்த 'ரிலையன்ஸ் இன்ப்ரா' பங்குகள்
'ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்' நிறுவனத்தின் பங்குகள், நேற்றைய வர்த்தகத்தில் 5 சதவீதம் உயர்ந்து 'அப்பர் சர்க்யூட்' ஆகியுள்ளது. கடந்த ஆறு வர்த்தக நாட்களில் மட்டும் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 33 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
வர்த்தக தொடக்கத்தில் 84.99 ரூபாயாக இருந்த பங்கு விலை, பின்னர் 5 சதவீத உச்ச வரம்பான 85.85 ரூபாயை தொட்டதை அடுத்து, வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதேநேரம், நடப்பு 2026ம் ஆண்டில் இந்நிறுவன பங்குகள் ஒட்டுமொத்தமாக 45 சதவீதம் சரிவை கண்டுள்ளன. கடந்த ஓராண்டில் இப்பங்கு 77 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
