இனி ஓய்வூதிய திட்டங்களை ஒப்பிட்டு தேர்வு செய்யலாம்: புதிய
இனி ஓய்வூதிய திட்டங்களை ஒப்பிட்டு தேர்வு செய்யலாம்: புதிய
UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 10:25 PM

என். பி.எஸ்., முதலீடுகளுக்கு பெயரிடும் முறை, வெப்சைட் மற்றும் செயலியில் அவற்றை தெரிவிக்கும் நடைமுறை குறித்த பி.எப்.ஆர்.டி.ஏ.,வின் புதிய விதிகள், வரும் டிச., 1 முதல் அமலுக்கு வருகின்றன.
ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்கள், பல முதலீட்டு திட்டங்களை அடையாளம் காண, ஏ, பி, சி, டி, இ, குறியீடுகளை இப்போது குறிப்பிடுகின்றன. இனி, இது தேவையில்லை. மேலும், சந்தாதாரர்கள் ஒரு குறிப்பிட்ட அபாய பிரிவை தேர்வு செய்தால், அந்தப் பிரிவில், அனைத்து ஓய்வூதிய நிதி நிறுவனங்களும் வழங்கும் திட்டங்களையும், பி.ஓ.பி., எனப்படும் சேவை மையங்கள் தங்களது தளங்களில் வெளிப்படுத்த வேண்டும்.
என்ன மாற்றம்?
திட்டங்களின் பெயர் மூன்று அம்சங்களை கொண்டிருக்கும்:
1. ஓய்வூதிய நிதி நிறுவனத்தின் சுருக்கமான பெயர்.
2.பொதுவான அடையாளமாக என்.பி.எஸ்.,
3. குறிப்பிட்ட திட்டத்திற்கான தனித்துவ பெயர்.
உதாரணமாக, 'ஏ.பி.சி., என்.பி.எஸ்., ஓய்வூதிய திட்டம்' என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுக செய்யலாம்; இதில் முதலீட்டு பிரிவைக் குறிக்கும் தனிக்குறியீடு இடம்பெறாது.
அபாய அளவு
திட்டங்களின் பெயர்களில் முதலீட்டு பிரிவுக்கான குறியீடுகள் நீக்கப்பட்டாலும், முதலீட்டாளர்கள் திட்டத்தின் அபாய அளவு மற்றும் வளர்ச்சி பிரிவு குறித்த தகவல்களை அறிவதில் பாதிப்பு கூடாது.
ஓய்வூதிய நிறுவனங்கள், தங்கள் திட்டத்தின் பெயருக்கு அருகில், அதன் வளர்ச்சி பிரிவு மற்றும் அபாய அளவை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
விளம்பரங்கள் மற்றும் விழிப்புணர்வு விளக்கங்களில் இந்த விபரங்கள் இடம்பெற வேண்டும்.
ஒப்பீடு செய்யலாம்
ஒருவர் ‘பேலன்ஸ்டு குரோத் – மீடியம் ரிஸ்க்’ பிரிவை தேர்வு செய்தால், அந்த பிரிவில் அனைத்து ஓய்வூதிய நிதி நிறுவனங்களின் திட்டங்களும் அவருக்கு காட்டப்பட வேண்டும். இதனால், திட்டங்களை ஒப்பிட்டு பார்த்து, சந்தாதாரர்கள் தங்களுக்கு பொருத்தமான திட்டத்தை தேர்வு செய்ய முடியும்.
