ADDED : நவ 11, 2025 01:08 AM

தி ங்களன்று, ரூபாய் மதிப்பு வரலாறு காணாத குறைந்தபட்ச மதிப்புக்கு கீழிறங்காமல், 88.71 என்ற அளவிலேயே நிறைவடைந்தது.
அமெரிக்காவின் வரிகள் மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது போன்ற கவலைகள் இருந்தபோதிலும், ரிசர்வ் வங்கி, சந்தையில் தக்க சமயத்தில் தலையிட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தியது.
ரிசர்வ் வங்கி தற்போது 88.80 என்ற எல்லைக்கு கீழே ரூபாயின் மதிப்பை உறுதியாக பாதுகாத்து வருகிறது. குறுகிய காலத்தில், ரூபாயின் மதிப்பு 88.40 முதல் 89.00 வரை இருக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்காவில் 40 நாட்களாக நீடித்த அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர, செனட் ஒரு மசோதாவை இரு கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது. இது சந்தைக்கு ஒரு சிறிய நிம்மதியை அளித்துள்ளது.
சீன பங்குகளைவிட இந்திய பங்குகள் சிறந்த மதிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ள எச்.எஸ்.பி.சி., இந்திய பங்குகளில் அதிக முதலீடு செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.
இதுபோன்ற சாதகமான கருத்துகள், அன்னிய முதலீட்டை ஈர்க்க உதவுவதோடு, ரூபாயை வலுப்படுத்த உதவும்.
நம் நாட்டின் வலுவான பொருளாதார அடிப்படைகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை காரணமாக, நடுத்தர காலத்தில் ரூபாயின் மதிப்பு, வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது.
ரூபாயின் மதிப்பு 88.40ஐ விட வீழ்ச்சி கண்டால், அது 88.00 முதல் 87.70 என்ற இலக்கை நோக்கி மேலும் வலுப்பெறக்கூடும்.

