பட்டாசு தொழிலை பாதுகாக்க பியுஷ் கோயலிடம் கோரிக்கை
பட்டாசு தொழிலை பாதுகாக்க பியுஷ் கோயலிடம் கோரிக்கை
ADDED : ஜன 22, 2026 01:20 AM

சென்னை 'ஏற்கனவே உரிமம் பெற்றுள்ள பட்டாசு விற்பனை கடைகளை, புதிய வெடிபொருள் விதிகளில் இருந்து விலக்கு அளித்து பாதுகாக்க வேண்டும்' என, மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, தமிழக பட்டாசு மற்றும் கேப் வெடி தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கணேசன் பஞ்சுராஜன் கூறியதாவது:
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியில், 1,180 தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ளன. பட்டாசு உற்பத்தியால், 3 லட்சம் பேர் நேரடியாகவும், 5 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை செய்கின்றனர்.
'வெடிபொருள் விதிகள் 2008' அடிப்படையில் உரிமம் பெற்றுள்ள பட்டாசு விற்பனை கடைகளை, புதிய வெடிபொருள் விதிகளில் இருந்து விலக்கு அளித்து பாதுகாக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த, 2015ல் இருந்து எங்கள் பட்டாசு தொழில் பல்வேறு கடுமையான சவால்கள் மற்றும் பிரச்னைகளை எதிர் கொண்டு வருவது குறித்து, மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் மனு அளிக்கப்பட்டது.
பட்டாசு தொழிலை பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு, சி.எஸ்.ஐ.ஆர்., - 'நீரி' ஆய்வகம் வாயிலாக விரிவான அறிவியல் ஆய்வுகள், ஆராய்ச்சிகள் மற்றும் பல்வேறு பரிசோதனை - மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, மிகுந்த முயற்சியுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
கோரிக்கைகள் குறித்து, மத்திய அமைச்சக அதிகாரிகளுடன் உடனே அதிகாரப்பூர்வ கூட்டம் நடத்தப்படும் என்றும், வரும் பிப்ரவரியில் பட்டாசு தயாரிப்பாளர்களை அழைத்து முக்கிய கூட்டம் நடத்தி, பட்டாசு தொழிலின் பாதுகாப்புக்கான நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.

