ADDED : அக் 01, 2025 01:11 AM

வரும் நவம்பர் 1 முதல், ஒருசில பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை 'எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்' நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. இது பற்றிய குறிப்பை அது சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கல்விக் கட்டணங்களை நேரடியாக பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்டவற்றுக்கு அவர்களின் இணையதளங்கள் அல்லது 'பாய்ன்ட் ஆப் சேல்' இயந்திரங்களின் வாயிலாக கட்டினால், எந்த கூடுதல் கட்டணமும் கிடையாது.
ஆனால், இந்தக் கட்டணங்களை 'க்ரெட், செக், மொபிகுவிக்' உள்ளிட்ட தனியார் செயலிகளின் வாயிலாகச் செலுத்தினால், பரிவர்த்தனை தொகையில் 1 சதவீதம் எஸ்.பி.ஐ. கார்டு கட்டணமாக வசூலிக்கும். உங்கள் மொபைல் வாலட்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் அனுப்பி வைத்தால், இத்தகைய ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் பரிவர்த்தனை தொகையில் 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் எஸ்பிஐ கார்டு கூறுகிறது. இது குறிப்பிட்ட சில வணிகர் குறியீடுகளின் கீழ் அடையாளம் காணப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்தக் கட்டணங்கள் முன்பு இல்லை. வரும் நவம்பர் 1 முதல் அமலாகப் போகின்றன. வாடிக்கையாளர்கள், மொபைல் செயலிகளைப் பயன்படுத்தும்போது, அதனால் கூடுதல் கட்டணம் ஏதேனும் வசூலிக்கப்படுமா என்று தெரிந்துகொண்டு, பயன்படுத்துவது நல்லது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.