ADDED : மே 16, 2026 12:15 AM

அ மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு 96.14 ரூபாய் என்ற புதிய சரிவை சந்தித்த நிலையில், இறுதியில் முந்தைய நாளை விட 15 காசுகள் குறைந்து 95.81 என்ற அளவில் நிலைபெற்றது. நடப்பாண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 6 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது.
இதன் வாயிலாக, வளர்ந்து வரும் நாடுகளின் நாணயங்களிலேயே இந்த ஆண்டில் மிக மோசமாக செயல்படும் நாணயமாக, இந்திய ரூபாய் உருவெடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் தலையீடு மற்றும் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு போன்றவை, ரூபாயின் மதிப்பை மேலும் வீழ்ச்சியடையாமல் தடுக்கக்கூடும் என, நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து, 'சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமித் பபாரி தெரிவித்ததாவது, இந்திய ரூபாயின் மதிப்பு 96 என்ற முக்கியமான வரம்பை கடந்து சரிந்தது என்பது வெறும் எண்ணை மட்டும் குறிப்பதல்ல; மாறாக, இந்திய பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தின் அறிகுறியாகும்.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்காது என்ற எதிர்பார்ப்பு, ரூபாய் மதிப்பை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது. மேற்கு ஆசிய போர் சூழல் மற்றும் அமெரிக்க - சீன அதிபர்களுக்கு இடையிலான சந்திப்பு போன்றவை, சந்தையில் பெரும் மாற்றங்களை உண்டாக்கக்கூடும்.
தற்போதைய சூழலில், 96.00 - 96.20 என்ற மதிப்பு ரூபாய்க்கு ஒரு தடை நிலையாகவும், 94.80 - 95.00 என்ற மதிப்பு ஓரளவிற்கு ஆதரவு நிலையாகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
