தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஜூடியோ முதல் ஸ்டார் வரை 'டிரென்ட்' நிறுவன வளர்ச்சி

 ஜூடியோ முதல் ஸ்டார் வரை 'டிரென்ட்' நிறுவன வளர்ச்சி

 ஜூடியோ முதல் ஸ்டார் வரை 'டிரென்ட்' நிறுவன வளர்ச்சி


UPDATED : ஜூலை 12, 2026 01:45 AM

ADDED : ஜூலை 12, 2026 01:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2026 01:45 AM ADDED : ஜூலை 12, 2026 01:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டிரென்ட் லிமிடெட்' நிறுவனம், கடந்த 1998ம் ஆண்டு 'லாக்மே மற்றும் லிட்டில்வுட்ஸ் இந்தியா' நிறுவனங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட டாடா குழும நிறுவனமாகும். 'வெஸ்ட்சைடு, ஜூடியோ, ஸ்டார்' உள்ளிட்ட பிராண்டுகள் வாயிலாக ஆடை, வாழ்க்கை முறை மற்றும் மளிகை வணிகத்தில் செயல்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 20 புதிய கடைகளை திறந்ததையும் சேர்த்து, தற்போது இந்நிறுவனம் மொத்தம் 1,312 கடைகளை நடத்தி வருகிறது.

வெஸ்ட்சைடு வளர்ச்சி ஜூடியோ, நிறுவனத்தின் முக்கிய வளர்ச்சி இயந்திரமாக உள்ளது. மொத்த வருவாயில் 60 சதவீதத்திற்கும் அதிக பங்களிப்பை வழங்குகிறது. 2018ம் நிதியாண்டில் 7 கடைகளுடன் தொடங்கிய ஜூடியோ, இன்று கிட்டத்தட்ட 1,000 கடைகளாக வளர்ந்துள்ளது. குறைந்த விலை, முழுமையாக சொந்த பிராண்டு பொருட்கள் மற்றும் வேகமான சரக்கு சுழற்சி ஆகியவை இதன் பலமாகும். ஒரே பகுதியில் அதிக கடைகள் திறக்கப்பட்டதால், தற்போதுள்ள கடைகளின் விற்பனை வளர்ச்சி சற்று மந்தமடைந்துள்ளது.

Image 1597895


இருப்பினும், நீண்ட கால இலக்காக 5,000 கடைகளை உருவாக்கவும், ஆண்டுதோறும் 200 முதல் 250 புதிய கடைகளைத் திறக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஜூடியோ தனது முதல் கட்ட விரிவாக்கத்தை தொடங்கியுள்ளது.

வெஸ்ட்சைடு கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கிளப்வெஸ்ட் உறுப்பினர் திட்டத்தில் தற்போது 1.90 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்த திட்டத்தின் வாயிலாக வெஸ்ட்சைடின் விற்பனையில் 90 சதவீதம் கிடைக்கிறது.

தற்போது 300 கடைகள் உள்ள நிலையில், நீண்ட காலத்தில் 700 கடைகளாக உயர்த்தவும், ஆண்டுக்கு 50 புதிய கடைகளை திறக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இணையவழி விற்பனையும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது.

'ஸ்டார்' சாத்தியக்கூறுகள் ஸ்டார் பிராண்டு இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படாத வளர்ச்சி வாய்ப்பாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மளிகை சந்தையில் தற்போது சில நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்ட கடைகள் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளன. இதையடுத்து தமிழ்நாட்டையும் உள்ளடக்கி ஆண்டுக்கு 25 முதல் 40 புதிய ஸ்டார் கடைகளைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய முதலீடுகள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு புதிய சில்லறை வர்த்தக பிராண்டை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் நிறுவனம் செயல்படுகிறது.

காலணிகள், உள்ளாடைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட புதிய பிரிவுகள் ஏற்கனவே மொத்த வருவாயில் 20 சதவீதம் பங்களித்து வருகின்றன. ஜூடியோ பியூட்டி, பர்ன்ட் டோஸ்ட், சமோ, உத்சா, போம் ஆகிய புதிய பிராண்டுகள் தற்போது வளர்ச்சி கட்டத்தில் உள்ளன.

பர்ன்ட் டோஸ்ட் 2010ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த தலைமுறையினருக்கான மலிவு விலை ஆடை பிராண்டான 'பர்ன்ட் டோஸ்ட்' மற்றும் பாரம்பரிய ஆடைகளுக்கான 'சமோ' ஆகியவை தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன. அவற்றின் வணிக முறை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட பிறகே நாடு முழுவதும் விரிவுபடுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

'போம்' விரிவாக்கம் 'போம்' என்பது ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைர நகைகளை விற்பனை செய்யும் பிராண்டு ஆகும். குறைந்த விலையில் வைர நகைகளை வழங்குவதால், இது நகைத் துறையில் பெரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது. அடுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் இதையும் விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தலைமை மாற்றங்கள் வயது வரம்பு விதிமுறையின்படி, 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நோயல் டாடா தலைவர் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பி. வெங்கடேசலு நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருவதால், செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. நோயல் டாடா, டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பின் தலைவராக தொடர்வதால், குழுமத்தின் வழிகாட்டுதல் நீடிக்கும்.

புதிய தலைவர் யார் என்பது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சமாகும். நிறுவனம் நீண்ட கால வருவாய் வளர்ச்சி இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறது. கிடங்குகள், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு வசதிகள் மற்றும் ஸ்டார் வணிக விரிவாக்கத்திற்காக 2,500 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகளின் பயன்பாட்டில் புதிய தலைவரின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

முக்கிய அம்சங்கள்  இந்தியாவின் ஆடை மற்றும் வாழ்க்கை முறை சந்தையில் நிறுவனத்தின் பங்கு வெறும் 2 சதவீதம் மட்டுமே. எனவே நீண்ட கால வளர்ச்சிக்கு பெரிய வாய்ப்பு உள்ளது

 ஜூடியோ மற்றும் வெஸ்ட்சைடு கடைகளின் விற்பனை வளர்ச்சி சற்று மந்தமடைந்துள்ளது. தற்போதுள்ள கடைகளின் செயல்திறனை மேம்படுத்துவது முக்கியமாகும்

 ஜூடியோ மற்றும் வெஸ்ட்சைடின் வெளிநாட்டு விரிவாக்கம் நடுத்தர கால வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும்

 காலணிகள், உள்ளாடைகள் உள்ளிட்ட புதிய பிரிவுகள் கூடுதல் வளர்ச்சி வாய்ப்பை உருவாக்குகின்றன

 தலைமை பொறுப்பு மாற்றம் என்பது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய நிர்வாக நிகழ்வாகும். இருப்பினும், தற்போதைய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வாயிலாக அன்றாட செயல்பாடுகள் தடையின்றி தொடர்வதால், குறுகிய கால செயல்பாட்டு அபாயங்கள் குறைவாகவே உள்ளன.

டிரென்ட் நிறுவனம் தற்போது அதன் கடந்தகால வருவாயைக் காட்டிலும் 100 மடங்கு அதிக மதிப்பில் வர்த்தகம் ஆகிறது. இந்த அதிகப்படியான பங்கின் மதிப்பு, வரவிருக்கும் ஆண்டுகளில் நிறுவனம் செய்யவிருக்கும் வேகமான கிளை விரிவாக்கத்தையும், லாப வரம்பு மேம்பாட்டையும் ஏற்கனவே கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.

பங்குகளின் மிக அதிக விலை மற்றும் தற்போது குறைந்து வரும் ஜூடியோவின் விற்பனை வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதற்கு இன்னும் சிறந்த வாய்ப்புகளுக்காக காத்திருக்கலாம்.

இருப்பினும், சந்தையில் ஏதேனும் கணிசமான சரிவு ஏற்பட்டால், இந்த பங்குகளை இன்னும் நியாயமான விலையில் வாங்கி சேமிப்பதற்கான நல்ல வாய்ப்பாக அது அமையும்.

பொறுப்பு துறப்பு இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us