ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : வேகத்தை கூட்டும் டி.வி.எஸ்., மோட்டார்
ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : வேகத்தை கூட்டும் டி.வி.எஸ்., மோட்டார்
UPDATED : ஆக 02, 2026 02:58 AM
ADDED : ஆக 02, 2026 02:41 AM

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், இந்தியாவின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்றாலும், பெரும்பாலான பங்குகள் டி.வி.எஸ்., குடும்பத்தின் வசமே உள்ளன. வேணு சீனிவாசன் ஓய்வுபெற்ற தலைவராகவும், சுதர்சன் வேணு நிர்வாக இயக்குனராகவும் நிறுவனத்தை வழிநடத்தி வருகின்றனர்.
நிறுவனத்தின் உற்பத்தி
ஆலைகள் இந்தியாவின் ஓசூர், மைசூர், நலகர் மற்றும் இந்தோனேசியாவின் கரவாங் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. மேலும், இங்கிலாந்தின் சோலிஹலில் 'நார்டன் மோட்டார் சைக்கிள்ஸ்' தொழிற்சாலையும் இயங்கி வருகிறது.
![]() |
மோட்டார் சைக்கிள் பிரிவு
இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் ஹீரோ மற்றும் ஹோண்டாவுக்கு அடுத்தபடியாக டி.வி.எஸ்., மூன்றாவது இடத்தில் உள்ளது. 2026ம் நிதியாண்டில், 150 - 200 சி.சி., பிரிவில் 'அப்பாச்சி' சீரிஸ் 38 சதவீத சந்தைப் பங்குடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இது முந்தைய ஆண்டைவிட, 28 சதவீத வளர்ச்சியாகும். 125 சி.சி., பிரிவில் 'ரைடர்' 12 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. ஸ்போர்ட், ஸ்டார் சிட்டி+ போன்றவை ஆரம்பநிலை பயணிகளுக்காகவும், ரைடர் மற்றும் அப்பாச்சி ஆர்.டி.ஆர்., - ஆர்.ஆர்., மாடல்கள் இளைஞர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஸ்கூட்டர் மற்றும் மொபெட்
இந்திய ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டாவுக்கு அடுத்தபடியாக, டி.வி.எஸ்., இரண்டாவது இடத்தில் உள்ளது. 2025ம் நிதியாண்டில், 26 சதவீதமாக இருந்த சந்தைப் பங்கு, 2026-ல் சுமார் 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. 'ஜூபிடர்' பிராண்டு நிறுவனத்தின் மிகப்பெரிய விற்பனை பிராண்டாகவும், 'என்டார்க்' இளைஞர்களை இலக்காகக் கொண்ட ஸ்போர்ட்டி ஸ்கூட்டராகவும் விளங்குகிறது.
மொபெட் பிரிவில் எக்ஸ்.எல்., சீரிஸ் இன்றும் வலுவான சந்தையைத் தக்க வைத்துள்ளது. கிராமப்புறங்களிலும் சிறு வணிகங்களிலும் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
மூன்று சக்கர வாகனங்கள்
பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான ஆட்டோ ரிக் ஷாக்களை 'டி.வி.எஸ்., கிங்' என்ற பிராண்டில் நிறுவனம் விற்பனை செய்கிறது.
இங்கிலாந்தின் நார்டன் மோட்டார் சைக்கிள்ஸ் வாயிலாக பிரீமியம் மற்றும் சூப்பர்பைக் சந்தையிலும் நிறுவனம் தனது இருப்பை வலுப்படுத்தி வருகிறது. 'மேங்க்ஸ், அட்லாஸ்' மாடல்களின் உற்பத்தி ஓசூரில் தொடங்கப்பட்டு உள்ளது.
முதற்கட்ட அட்லாஸ் மாடல்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, அமெரிக்க சந்தையிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி
இந்தியாவே நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இருந்தாலும், ஏற்றுமதி வர்த்தகமும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. தற்போது 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் டி.வி.எஸ்., வாகனங்கள் விற்பனையாகின்றன. 2026ம் நிதியாண்டில், மொத்த வருவாயில், 25 சதவீதம் சர்வதேச சந்தைகளிலிருந்து கிடைத்தது.
மேலும், 28 சதவீத சந்தைப் பங்குடன் பஜாஜ் ஆட்டோவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய இருசக்கர வாகன ஏற்றுமதியாளராக நிறுவனம் உள்ளது.
மின்சார வாகனங்கள் கடந்த 2020 ஜனவரியில் அறிமுகமான 'ஐகியூப்' மின்சார ஸ்கூட்டர், தற்போது நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முக்கிய காரணமாக மாறியுள்ளது. ஜூன் 2026-ல் 10 லட்சமாவது ஐகியூப் உற்பத்தி செய்யப்பட்டு, முக்கிய மைல்கல்லை எட்டியது.
ஆரம்பநிலை வாடிக்கையாளர்களை ஈர்க்க 'ஆர்பிட்டர்' மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில், சுமார் 24 சதவீத பங்களிப்புடன் டி.வி.எஸ்., முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு ஐந்து டி.வி.எஸ்., ஸ்கூட்டர்களில் ஒன்றாக மின்சார ஸ்கூட்டர் உள்ளது.
காலாண்டு செயல்பாடு
கடந்த 2026 ஜூன் காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 38 சதவீதம் உயர்ந்தது. நிகர லாபம் 51 சதவீதம் அதிகரித்தது. இந்திய இருசக்கர வாகனத் துறை 13 சதவீத வளர்ச்சி கண்ட நிலையில், டி.வி.எஸ்., நிறுவனத்தின் ஐ.சி., எஞ்சின் வாகன விற்பனை 21 சதவீதம் உயர்ந்தது.
விரிவாக்கத் திட்டம்
நடப்பு 2027ம் நிதியாண்டில், தொழிற்சாலை விரிவாக்கம் மற்றும் புதிய தயாரிப்புகளுக்காக சுமார் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டு இருசக்கர வாகன உற்பத்தித் திறன், 68 லட்சத்தில் இருந்து 83 லட்சமாக உயர்த்தப்படும். மூன்று சக்கர வாகன உற்பத்தித் திறனும் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.
புதிய கூட்டணி
மின்சார மூன்று சக்கர வாகனங்களை உருவாக்க ஹூண்டாயுடன் டி.வி.எஸ்., புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இருப்பினும், இந்த தயாரிப்பு சந்தைக்கு வரும் காலக்கெடு குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கவலை
'ஜனா ஸ்மால் பைனான்ஸ்' வங்கியில் முதலீடு செய்திருப்பது முதலீட்டாளர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது. 2026 மே மாதத்தில், அந்த வங்கியின் 4.90 சதவீத பங்குகளை, 193 கோடி ரூபாய்க்கு வாங்க நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது. மொத்தமாக, 9.90 சதவீத வரை பங்குகளைப் பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டி.வி.எஸ்., மோட்டார் பங்கு விலை 5%க்கும் மேல் சரிந்தது. முக்கிய வாகன வணிகத்தை விட வங்கி முதலீட்டில் நிறுவனம் கவனம் செலுத்துகிறதா என்ற சந்தேகம் முதலீட்டாளர்களிடையே உருவாகி யுள்ளது.
இ- - பைக் முயற்சி
கடந்த 2021 - 22 காலக்கட்டத்தில், ஐரோப்பிய மின்சார மிதிவண்டி சந்தையில் பெரும் முதலீடு செய்த டி.வி.எஸ்., எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த முயற்சி நிறுவனத்திற்கு ஏமாற்றத்தை அளித்தாலும், அதனால் ஏற்பட்ட அனுபவத்தை பயன்படுத்தி, மின்சார இருசக்கர வாகனங்களில் கவனத்தை அதிகரித்து வருகிறது.
எதிர்கால வளர்ச்சி
வரும் 2027 - 2029ம் நிதியாண்டுகளில், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஐ.சி., எஞ்சின் வாகனங்களின் தொடர்ச்சியான விற்பனை, மின்சார இருசக்கர வாகனப் பிரிவில் லாப விகித உயர்வு, ஏற்றுமதி விரிவாக்கம் மற்றும் நார்டன் போன்ற பிரீமியம் பிராண்டுகளின் வளர்ச்சி முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

