/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஓசூர் விமான நிலையம் அரசு துறைகளிடம் விபரம் கேட்பு
/
ஓசூர் விமான நிலையம் அரசு துறைகளிடம் விபரம் கேட்பு
ADDED : ஆக 20, 2024 02:47 AM
சென்னை;கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில், விமான நிலையங்களின் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள, வானிலை, நீர்நிலைகள் உள்ளிட்ட விபரங்களை பல துறைகளிடம் இருந்து பெறும் பணியில், 'டிட்கோ' ஈடுபட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் அதை சுற்றிய இடங்களில் பல நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன.
எனவே, பயண நேரத்தை குறைக்கவும், சரக்குகளை விரைந்து கையாளவும், ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகளை தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொள்கிறது.
இந்நிறுவனம், 2,000 ஏக்கரில் ஓசூர் விமான நிலையத்திற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நான்கு இடங்களை தேர்வு செய்து, சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து தருமாறு இந்திய விமான நிலையங்களின் ஆணையத்திடம் வழங்கிஉள்ளது.
அந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ள வருமாறு விமான நிலையங்களின் ஆணைய அதிகாரிகளுக்கு, 'டிட்கோ' தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் மழைப்பொழிவு, வானிலை நிலவரம், நீர் நிலைகள், நிலத்தின் வகை என, பல தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது. இதற்காக ஒவ்வொரு துறைகளிடம் இருந்தும், அந்த விபரங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்த பணியை முடித்து விட்டு, அந்த விபரத்தை தெரிவித்தால், விமான நிலையங்களின் ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு வந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்வர். இம்மாத இறுதியில் அவர்கள் ஆய்வுக்கு வர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

