/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
திசை அறியா நிலை வந்து போகவும் வாய்ப்புள்ளது
/
திசை அறியா நிலை வந்து போகவும் வாய்ப்புள்ளது
ADDED : ஜூலை 27, 2024 11:40 PM

கடந்த வாரம்
தொடர்ந்து ஐந்து வர்த்தக நாட்களாக இறக்கத்தை சந்தித்து வந்த சந்தை, கடந்த வெள்ளியன்று ஏற்றம் கண்டது. பட்ஜெட்டை தொடர்ந்து பங்குகளை அதிகளவில் விற்று வந்த அன்னிய முதலீட்டாளர்களும், நேற்று முன்தினம் குறிப்பிடத்தக்க அளவு பங்குகளை வாங்கி இருந்தனர்
கடந்த வாரம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரியை உயர்த்தி அறிவித்ததால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் வருத்தமடைந்துள்ளனர். குறுகிய கால முதலீட்டாளர்கள், நம் நாட்டு சந்தைகளில் அதிகளவில் பங்கு பெறுவதால், இப்பிரிவு முதலீடுகளுக்கான வரி 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது, இவர்களுக்கு இது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது
'ஸ்டார்ட் அப்' எனும் புத்தொழில் நிறுவனங்கள், 'ஏஞ்சல்' முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டும் நிதிக்கு வசூலிக்கப்பட்டு வந்த 'ஏஞ்சல் வரி' முறை, முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது
பியூச்சர் அண்டு ஆப்ஷன் வர்த்தக பிரிவுகளில் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதாக சமீப காலமாக 'செபி' எச்சரித்து வந்தது. இந்நிலையில், இப்பிரிவில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான வரி 0.02 மற்றும் 0.1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு, தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையை சேர்த்த 'பிளாஷ் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு' ஜூலையில் 61.40 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. சிறப்பான சந்தை சூழல் மற்றும் புதிய வணிக வாய்ப்புகளே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தன.
வரும் வாரம்
உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்க அளவு, எம்3 பணப்புழக்கம், எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
வேலை வாய்ப்புகள் மற்றும் பணியாளர்கள் நிறுவனம் மாறுதல் குறித்த சர்வே முடிவுகள், விற்காமல் இருக்கும் வீடுகள் விற்பனை நிலவரம், பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம், ஐ.எஸ்.எம்., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, விவசாயமல்லாத பணிகளில் பணியாளர்களின் எண்ணிக்கை, வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 21 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 30 புள்ளிகள் இறக்கத்துடனும், புதனன்று 65 புள்ளிகள் இறக்கத்துடனும், வியாழனன்று 7 புள்ளிகள் இறக்கத்துடனும், வெள்ளியன்று வர்த்தக நாளின் இறுதியில் 428 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், வாராந்திர அடிப்படையில் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில் 303 புள்ளிகள் ஏற்றத்துடன் நிப்டி நிறைவடைந்திருந்தது
வரும் வாரத்தில், பல நிறுவனங்களின் 2024--25 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்கின்றன. அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டிவிகித முடிவுகள். செய்திகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவற்றின் பங்களிப்பும், வரும் வாரத்தில் நிப்டியின் நகர்வை முடிவு செய்வதாக இருக்கும்
டெக்னிக்கல் அனாலிசிஸ் அளவீடுகளின் படி பார்த்தால், நிப்டியில் ஏறுவதற்கு தயக்கம் உருவாகியுள்ள சூழல் இருப்பதைப் போன்ற நிலைமையே தென்படுகிறது. செய்திகளும் நிகழ்வுகளும் சாதகமாக இருந்தால் ஏற்றம் தொடர்வதற்கு வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் திசை அறியா நிலை வந்து போகவும் வாய்ப்புள்ளது என்பதை வர்த்தகர்கள் மனதில் கொண்டு செயல்படவேண்டும்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ்சார்ந்த தற்போதைய நிலவரம்:
நிப்டி 24,319, 23,803 மற்றும் 23,502 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 25,106, 25,377 மற்றும் 25,678 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24,590 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து வர்த்தகமாகிக்கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.