/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நிதிச்சுமை அதிகரிப்பால் தங்க பத்திரம் இனி இல்லை?
/
நிதிச்சுமை அதிகரிப்பால் தங்க பத்திரம் இனி இல்லை?
ADDED : ஆக 23, 2024 01:42 AM

புதுடில்லி:உலோகமாக அல்லாமல் காகித வடிவில் தங்கத்தை வாங்குவதற்கான தங்கப் பத்திரம் வெளியிடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட இருப்பதாக தெரிகிறது.
தங்கம் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், 2015ம் ஆண்டில் தங்கப் பத்திரம் வெளியிடும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியது. அப்போது முதல், குறிப்பிட்ட இடைவெளியில் இதுவரை 67 முறை வெளியிட்ட தங்கப் பத்திரம் திட்டத்தில் மக்கள் 72,274 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கின்றனர்.
இந்த 67 முறைகளில், முதலாவது நான்கு திட்டங்கள் முதிர்வு அடைந்து, முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பித் தரப்பட்டது. புள்ளிவிபரப்படி, தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு தலா 2.5 சதவீத வட்டி கிடைத்ததுடன் முதிர்வின்போது இரட்டிப்பு லாபம் கிடைத்ததாக தெரிகிறது.
தங்கப் பத்திர முதலீட்டாளர்களுக்கு அரசு சுமார் 85,000 கோடி ரூபாய் வழங்க வேண்டியிருப்பதாக அண்மையில் வெளியான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டில் சுமார் 10,000 கோடியாக இருந்த தொகை, சுமார் 8 மடங்கு அதிகரித்துள்ளதால் அதிக செலவு ஏற்படுகிறது என, அரசு கருதுவதாக தெரிகிறது. எனவே, இனி தங்கப் பத்திரத்தை வெளியிடாமல் இருக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கு வழக்கம்போல வட்டியும் முதிர்வு தொகையும் மாற்றமின்றி தொடரும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

