/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இளம் முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
/
இளம் முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
ADDED : பிப் 02, 2025 09:05 PM

சந்தை சரிவு, கலக்கத்தை அளிக்கலாம் என்றாலும், புதிய முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடத்தையும் கற்றுத் தருகிறது.
இந்திய முதலீட்டாளர்கள் அணுகுமுறையில் அண்மைக்காலமாக முக்கிய மாற்றம் ஏற்பட்டு வருவதை அறிய முடிகிறது. வைப்பு நிதி போன்ற பாரம்பரிய முதலீடுகளை அதிகம் நாடி வந்த நிலையில், சம பங்கு மற்றும் மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட முதலீடு வாய்ப்புகளும் பிரபலமாகி வருகின்றன.
குறிப்பாக இளம் தலைமுறை முதலீட்டாளர்கள் பலர், சம பங்கு முதலீடுகள் தொடர்பான விழிப்புணர்வை பெற்றுள்ளனர். நீண்ட கால நோக்கில் பங்கு முதலீடு அதிக பலன் தரக்கூடியதாக கருதப்படுவதால், பங்கு முதலீடு ஆர்வம் வரவேற்கத்தக்கதே.
சந்தை பாடம்
எனினும், பங்கு முதலீட்டால் ஈர்க்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு, கடந்த மாதம் துவக்கத்தில் ஏற்பட்டது போன்ற திடீர் சரிவு அதிர்ச்சியை அளிக்கலாம். ஜனவரி 6ம் தேதி சென்செக்ஸ், 1600 புள்ளிகள் சரிந்தது.
இதனால் பெரும் இழப்பும் ஏற்பட்டது. பங்கு முதலீடு அளிக்கக்கூடிய பலனால் ஈர்க்கப்பட்டவர்களுக்கு, இந்த இழப்பு கலக்கத்தை உண்டாக்கியிருக்கும்.
இந்த அச்சத்திற்கு மத்தியில் பலரும் பங்குகளை நஷ்டத்தில் விற்று வெளியேறி இருக்கலாம். இது போன்ற சந்தை சரிவுகளில் நஷ்டத்தை தவிர்ப்பது எப்படி என அறிந்து கொள்வது முக்கியம்.
சந்தையில் ஏற்படும் சரிவு, ஏற்ற இறக்கம் என்பது பங்குச் சந்தையின் ஒரு அங்கம் என்பதை உணர்த்துவதாக அமைகிறது. முதல் முறை அல்லது புதிய முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகவும் இது அமைகிறது.
சந்தையின் ஏற்ற இறக்கம் தவிர்க்க இயலாதது என்பதால், அதை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். முதல் விஷயம், சந்தை சரிவுக்குள்ளாகும் போது, அதனால் பீதியடைந்து முதலீட்டை விலக்கிக் கொள்ளாமல், சரிவுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நிகழ்வுகள் மற்றும் பொதுவான பல போக்குகள் இதற்கு காரணமாக அமையலாம்.
விரிவாக்கம்
அதே நேரத்தில் ஏற்ற இறக்கங்களை மீறி, பங்கு சந்தை நீண்ட கால நோக்கில் நல்ல பலனை அளித்து வந்திருப்பதை உணர வேண்டும். பங்கு சந்தை தொடர்பான புள்ளிவிபரங்கள், ஒரு நேரத்தில் ஏற்படக்கூடிய 10 சதவீத சரிவுகள் இயல்பானதாக தெரிவிக்கின்றன. சரிவில் இருந்து சந்தை தொடர்ந்து மீண்டு வந்திருக்கிறது.
பல நேரங்களில் சரிவுக்கான காரணங்கள் தற்காலிகமானதாக இருக்கலாம். எனவே, அடிப்படை அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய பொருளாதாரத்தை பொருத்தவரை வளர்ச்சிக்கான அடிப்படை அம்சங்கள் வலுவாக இருக்கின்றன.
ஏற்ற இறக்கத்தை எதிர்கொள்வதில், விரிவாக்கம் சரியான உத்தியாகக் கருதப்படுகிறது. மதிப்பு மிக்க பங்குகளில் செய்யும் முதலீடு, ஏற்ற இறக்கத்தை வெல்லக்கூடியது என்பதோடு, பல துறைகளில் செய்யப்பட்ட முதலீடு விரிவாக்கத்தின் பாதுகாப்பை அளிக்கும். பங்குகள் மிகை மதிப்பு கொண்டுள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.
மேலும், நிதி இலக்குகளுக்கு ஏற்ப கடன்சார் முதலீடு, தங்கம் மற்றும் பங்கு முதலீடு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். சரியும் சந்தையில், மதிப்பு மிக்க பங்குகள் குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பாகவும் அமையலாம்.
எனவே, சந்தையின் போக்கிற்கு ஏற்ப செயல்படாமல், வளர்ச்சி வாய்ப்புள்ள உத்திகளை பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு தேவையான பொறுமை, ஆய்வு அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.