/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'உள்ளூரில் உயர்தர வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதே அரசின் நோக்கம்'
/
'உள்ளூரில் உயர்தர வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதே அரசின் நோக்கம்'
'உள்ளூரில் உயர்தர வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதே அரசின் நோக்கம்'
'உள்ளூரில் உயர்தர வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதே அரசின் நோக்கம்'
ADDED : அக் 30, 2024 08:34 PM

சென்னை:'படித்த இளம் தலைமுறையினர், அவரவர் பகுதியில் உயர்தர வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்பதே, அரசின் நோக்கம்' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள, படித்த இளம் தலைமுறையினர், அவரவர் பகுதியிலேயே, உயர்தர வேலை வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடுகள், அவரது வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் துவக்கப்பட்ட, தஞ்சை 'டைடல் பார்க்'கில், அனைத்து இடங்களும் நிறுவனங்களால் நிரம்பி, தஞ்சை மற்றும் அதை சுற்றிய பகுதிகளைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு, உள்ளூரிலேயே வேலை அளிக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது.
துாத்துக்குடியில் விரைவில் துவக்கப்பட உள்ள டைடல் பார்க்கில், இப்போதே இடங்கள் முழுதுமாக நிரம்பி உள்ளன. இது, அப்பகுதியில் உள்ள படித்த, இளம் தலைமுறையினருக்கு, குறிப்பாக படித்த பெண்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில், 'சிப்காட்' தொழில் பூங்கா மற்றும் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் விரைந்து நடக்கின்றன.
சிப்காட் பூங்கா, மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், சூழல் பாதுகாப்புடன், உலகத் தரத்திலான கட்டமைப்புகளை உடையதாக அமையும். இது, தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு, உந்து சக்தியாக இருக்கும்.
அதேபோல், மதுரையின் முக்கிய பகுதியான, மேலுார் மெயின் ரோடு, மாட்டுத்தாவணியில், 9.60 ஏக்கரில் டைடல் பார்க் உருவாகி வருகிறது.
இது, தரை தளம் மற்றும் 12 மாடிகள் கொண்டதாக, அனைத்து வசதிகளுடன் உருவாக்கப்படும்.
தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில், மிகவும் முனைப்பாக இருந்து, பல்வேறு முதலீடுகளை கொண்டு வந்து சேர்க்கும் முதல்வர், விரைவில் மதுரை டைடல் பார்க் கட்டுமானப் பணிகளை துவக்கி வைப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.