/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எல்லோருக்கும் ஏற்றதா... நேரடி பங்கு முதலீடு வழி!
/
எல்லோருக்கும் ஏற்றதா... நேரடி பங்கு முதலீடு வழி!
ADDED : நவ 04, 2024 01:00 AM

பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வது அதிக பலனை அளிக்கும் என்றாலும், அதிக இடர் கொண்டது என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
பங்குச்சந்தை முதலீடு அள்ளியும் தரலாம், அதே நேரத்தில் அதிக இழப்பையும் உண்டாக்கலாம் என்பது பரவலாக அறியப்பட்டதே. அதனால் தான், நேரடி பங்கு முதலீட்டிற்கு பதில், மியூச்சுவல் பண்ட் வழியிலான முதலீடு ஏற்ற வழியாக முன்வைக்கப்படுகிறது.
எனினும், அண்மை கால பங்குச்சந்தை போக்கு காரணமாக, நேரடி பங்கு முதலீட்டில் ஈடுபடுவது அதிக பலன் தருவதாக கருதப்பட்டு, அதன் காரணமாகவே ஈர்ப்பு மிக்கதாக அமைந்துள்ளது.
முதலீட்டாளர்கள் பலரும் நேரடி பங்கு முதலீட்டை நாடத் துவங்கி உள்ளனர். பங்கு முதலீட்டிற்கான டிமெட் கணக்குகள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது இதை உணர்த்துகிறது.
இடர் அம்சம்
மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யும் அனுபவம் கொண்டவர்களும் நேரடி பங்கு முதலீட்டால் ஈர்க்கப்பட்டுள்ளனர். நேரடி பங்கு முதலீடு அதிக பலன் அளிக்க கூடியது என்றாலும், மியூச்சுவல் பண்ட் வழியை கைவிட்டு பங்கு முதலீட்டை நாடுவது ஏற்றதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வது, விரும்பிய பங்குகளை தேர்வு செய்ய வழி வகுக்கும். முதலீடு தொகுப்பின் மீதான கட்டுப்பாட்டையும் இது ஏற்படுத்தும். அதற்கேற்ப அதிக பலன் பெறும் வாய்ப்பும் உள்ளது. தேர்ந்தெடுத்த பங்குகள் ஏறுமுகம் கண்டால் பலனும் அதிகரிக்கும்.
ஆனால், பங்கு முதலீடு என்பது அதிக பலன் அளிக்க கூடியது போலவே, அதிக இடரும் கொண்டது.
பங்குகள் ஏறுமுகம் காண்பது போலவே சரியவும் செய்யலாம். சரிவிற்கு ஏற்ப பாதிப்பும் அதிகம் இருக்கலாம். ஒரு சில பங்குகள் சரிந்தாலும், முதலீடு தொகுப்பில் பாதிப்பு உண்டாகும்.
எளிய துவக்கம்
அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் எனில், சந்தையின் சுழற்சி தன்மையை அறிந்து, அதற்கேற்ப செயல்படும் தன்மை பெற்றிருப்பார்கள். எனினும், சந்தையின் ஏறுமுக போக்கால் ஈர்க்கப்பட்டவர்கள், சரிவை எதிர்கொள்ள முடியாமல் பதற்றத்திற்கு உள்ளாகலாம்.
அதோடு, ஒரு சில வெற்றிகரமான பங்குகளை மட்டும் தேர்வு செய்யும் ஆற்றல் போதாது. நல்ல முதலீடு தொகுப்பு என்பது பல வகையான பங்குகளை கொண்டிருக்க வேண்டும். மேலும், பங்குகளை தேர்வு செய்ய மட்டும் அல்லாமல், தொடர்ந்து கண்காணிக்கவும், சந்தை அறிவும், அனுபவமும் தேவை.
இதற்கென கணிசமாக நேரத்தையும் ஒதுக்க வேண்டும். மியூச்சுவல் பண்ட் எனில், நல்ல நிதியாக தேர்வு செய்து முதலீடு செய்த பிறகு, செயல்பாட்டை அவ்வப்போது கண்காணித்தால் போதுமானது. ஆனால், பங்கு முதலீட்டில், அவற்றின் செயல்பாட்டில் தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டும்.
இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களுக்கு நேரடி பங்கு முதலீடு ஏற்றதாக இருக்கும். எனவே நேரடி பங்கு முதலீட்டிற்கு மாற நினைப்பதைவிட, கவனமாக இந்த வழியை பரிசீலிக்கலாம். சமபங்கு சார்ந்த முதலீட்டிற்கு மியூச்சுவல் பண்ட்களை தொடர்ந்து நாட வேண்டும்.
சமபங்கு முதலீட்டின் பெரும்பாலான தேவையை இந்த வழியில் பூர்த்தி செய்துவிட்டு, எஞ்சிய தொகையை நேரடி பங்குகளில் முதலீடு செய்யலாம். இதில் கிடைக்கும் பலன் மற்றும் அனுபவம் எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதாக அமையும்.