/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஏற்றம் தொடர்வதற்கான சூழல் இருப்பதை போலவே தெரிகிறது
/
ஏற்றம் தொடர்வதற்கான சூழல் இருப்பதை போலவே தெரிகிறது
ஏற்றம் தொடர்வதற்கான சூழல் இருப்பதை போலவே தெரிகிறது
ஏற்றம் தொடர்வதற்கான சூழல் இருப்பதை போலவே தெரிகிறது
ADDED : டிச 14, 2024 10:40 PM

கடந்த வாரம்
கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் முதல், நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரை, நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த அன்னிய நேரடி முதலீடு, 84.50 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது
நிப்டியின் ஐ.டி., குறியீடு கடந்த வாரம் சாதனை உச்சத்தை எட்டியது. அமெரிக்காவில் தேவை மீண்டுள்ளதால், அடுத்த நிதியாண்டில் இக்குறியீடு 7 சதவீதம் வரை வளர்ச்சி அடையக்கூடும் என எச்.எஸ்.பி.சி., வங்கி கணித்துஉள்ளது
கடந்த மாதம் சில்லரை விலை பணவீக்கம் 5.48 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இது 6.20 சதவீதம் என்ற 14 மாத உச்சத்தை எட்டிய நிலையில், நவம்பரில் அனைவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப குறைந்துள்ளது
நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த அக்டோபர் மாதத்தில் 3.50 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு அக்டோபரில் 11.90 சதவீதமாக இருந்தது. எனினும், செப்டம்பர் மாதத்தின் 3.10 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபரில் வளர்ச்சி அதிகரித்துள்ளது
நடப்பாண்டின் மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்கு இடையேயான காலத்தில், நாட்டின் முதல் நிலை, இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்பம், வங்கி, நிதி சேவைகள், காப்பீடு, தயாரிப்பு, பார்மா ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. முதல் நிலை நகரங்களில் அதிக வேலைவாய்ப்பு வழங்கிய பட்டியலில், பெங்களூரு முதலிடம் வகிக்கிறது
கடந்த நவம்பர் மாதத்தில் பயணியர் வாகனங்களின் மொத்த விற்பனை 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், சில்லரை விற்பனை 14 சதவீதம் சரிந்துள்ளதால், முகவர்களிடையே இருப்பு அதிகரித்துள்ளது.
வரும் வாரம்
எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, எச்.எஸ்.பி.சி., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, மொத்த விலை குறியீட்டின் அடிப்படையிலான பணவீக்கம், பயணியர் வாகன விற்பனை, ஏற்றுமதி- - இறக்குமதி வர்த்தக நிலவரம், அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
எஸ்., அண்டு பி., குளோபல் உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, எஸ்., அண்டு பி., குளோபல் சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, சில்லரை விற்பனை சந்தை நிலவரம், தொழிற்சாலைகளில் நடந்த உற்பத்தி, கட்டடங்கள் கட்டுவதற்கு தரப்பட்ட அனுமதிகளின் எண்ணிக்கை, பெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுகள், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விற்பனை நிலவரம், தனி நபர் வருமானம், தனி நபர் செலவினம், மிச்சிகன் நுகர்வோர் மனோபாவம் போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 58 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 8 புள்ளிகள் இறக்கத்துடனும்; புதனன்று 31 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வியாழனன்று 93 புள்ளிகள் இறக்கத்துடனும்; வெள்ளியன்று 219 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், வாராந்திர அடிப்படையில் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில், 90 புள்ளிகள் ஏற்றத்துடன் நிப்டி நிறைவடைந்து இருந்தது
அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுகள், செய்திகள், நிகழ்வுகள், மற்றும் உலக பங்கு சந்தைகளில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் போன்றவையே, வரும் வாரத்தில் இந்திய சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும்.
வரும் வாரத்தில் நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கான சூழல் இருப்பதை போன்ற தோற்றமே, டெக்னிக்கல் அனாலிசிஸின் அடிப்படையில் தென்படுகிறது. கடந்த வாரம் நிப்டி கண்ட ஏற்ற இறக்கங்களை வைத்து பார்த்தால், வரும் வாரத்திலும் டெக்னிக்கல் அனாலிசிஸ் வாயிலாக மேற்கொள்ளப்படும் அனுமானங்கள் செயல்படாமல் போவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது எனலாம். இதை, வர்த்தகர்கள் நினைவில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
உலகளாவிய நிகழ்வுகள், செய்திகள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுகள் போன்றவையே, வரும் வாரத்தில் நிப்டியின் ஏற்ற - இறக்கங்களை நிர்ணயம் செய்யும் காரணிகளாக இருக்கும் எனலாம்.
டெக்னிக்கல் அனாலிசிஸ் மூலம் செய்யப்படும் கணிப்புகள் சரிவர வேலை செய்வதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் காலகட்டங்களில், வர்த்தகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்ய வேண்டும்.
சராசரியாக வர்த்தகம் செய்யும் அளவில் கால் பங்குக்கும் குறைவான எண்ணிக்கையில் வர்த்தகம் செய்தல், மிகக் குறுகிய அளவிலான நஷ்டத்தை குறைக்க உதவும் ஸ்டாப்லாஸ்களை வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றை அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. செய்திகள் மற்றும் நிகழ்வுகள் மீது வர்த்தகர்கள் தொடர்ந்து கவனம் வைத்து வியாபாரம் செய்வதே, நல்லதொரு வர்த்தக உத்தியாக இருக்கும் எனலாம்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 24369, 23969 மற்றும் 23735 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 24980, 25192 மற்றும் 25426 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24580 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து அதிக அளவில் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.