/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பீஹாரில் 'மக்கானா'வுக்கு வாரியம் அமைப்பது போல் தமிழகத்தில் முந்திரி, பலாவுக்கும் அமைக்க எதிர்பார்ப்பு
/
பீஹாரில் 'மக்கானா'வுக்கு வாரியம் அமைப்பது போல் தமிழகத்தில் முந்திரி, பலாவுக்கும் அமைக்க எதிர்பார்ப்பு
பீஹாரில் 'மக்கானா'வுக்கு வாரியம் அமைப்பது போல் தமிழகத்தில் முந்திரி, பலாவுக்கும் அமைக்க எதிர்பார்ப்பு
பீஹாரில் 'மக்கானா'வுக்கு வாரியம் அமைப்பது போல் தமிழகத்தில் முந்திரி, பலாவுக்கும் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 16, 2025 10:41 PM

சென்னை:மத்திய அரசு, பீஹாரில் விளையும் மக்கானாவை உலகம் முழுதும் சந்தைப்படுத்த, அம்மாநிலத்தில் மக்கானா வாரியம் அமைக்க உள்ளது.
இதேபோல், தமிழகத்தில் விளையும் பலா, முந்திரி போன்றவற்றில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து ஏற்றுமதி செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உ.பி., பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில், மக்கானா எனப்படும் தாமரை விதையில் இருந்து, 'சிப்ஸ்' உட்பட பல வகை தின்பண்டங்கள், சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
மக்கானாவில் புரதம், நார்ச்சத்து போன்றவை அதிகம் இருப்பதால், பலரும் அதில் தயாரிக்கப்படும் பொருட்களை விரும்பி உண்கின்றனர்.
மக்கானா, பீஹார் மாநிலத்தில் தான் அதிகளவில் கிடைக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்டில் இம்மாதம் 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, 'பீஹாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும்; இது, மாநிலத்தின் மக்கானா உற்பத்தி, சந்தைப்படுத்துதல், மதிப்பு கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்தும்' என, அறிவித்தார்.
நடவடிக்கை
இதனால், பீஹாரில் வழக்கத்தை விட, மக்கானா விவசாயம் அதிகரிக்கும். அதை பயன்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதும் அதிகரிக்கும்.
இதேபோல், தமிழகத்தில் அதிகம் கிடைக்கும் பலா, முந்திரி உள்ளிட்ட பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிக்க, அரசு சிறப்பு அறிவிப்புகளை வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு, தொழில் முனைவோரிடம் எழுந்துள்ளது.
இது குறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது:
இந்தியாவில் முறைப்படுத்தப்பட்ட தின்பண்டங்களின் சந்தை மதிப்பு 20,000 கோடி ரூபாயாக உள்ளது. தமிழகத்தின் கடலுாரில் விளையும் முந்திரி, பலா மிகவும் சுவையானவை. இதேபோல், வாழைப்பழம், முருங்கை என, தமிழகத்திற்கு தனித்துவம் வாய்ந்த விளைபொருட்கள் உள்ளன.
இவற்றை விவசாயிகள் பயிரிடுகின்றனர். அவற்றை வாங்கும் நிறுவனங்கள், சிப்ஸ் உள்ளிட்ட வழக்கமான பொருட்களை மட்டும் தயாரித்து விற்கின்றன.
புதிய பொருள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம், தரமான விளைபொருள் எங்கு கிடைக்கிறது என்பதை அடையாளம் காண்பது போன்றவற்றுக்கு அதிகம் செலவிட வேண்டும் என்பதால், பலர் புதிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் கவனம் செலுத்துவதில்லை.
மத்திய அரசு, பீஹாரில் கிடைக்கும் மக்கானாவை உலகளவில் எடுத்து செல்வதற்கு, அம்மாநிலத்தில் மக்கானா வாரியம் அமைக்க உள்ளது. இதனால், மக்கானா உற்பத்தியை அதிகரிப்பது, அதை மதிப்பு கூட்டி, உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பயன் பெறுவர்
இதேபோன்று, தமிழகத்திலும் பலா, முந்திரி என, ஒரு பொருளை தனித்துவமாக எடுத்து, அதை மதிப்பு கூட்டி விற்க விவசாயிகள், உற்பத்தி நிறுவனங்கள், தொழில் ஆலோசனை, ஏற்றுமதியாளர்கள், சந்தை வாய்ப்பு, குளிர்பதன கிடங்கு, ஆய்வகத்தை உள்ளடக்கிய கட்டமைப்பு வசதி என, அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படி செய்தால், தமிழக விவசாயிகளும், தொழில் முனைவோர்களும் பயன் பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

