/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சிறப்பு வர்த்தகம்: சென்செக்ஸ், நிப்டி உயர்வு
/
சிறப்பு வர்த்தகம்: சென்செக்ஸ், நிப்டி உயர்வு
ADDED : நவ 01, 2024 11:56 PM

மும்பை:தீபாவளியை முன்னிட்டு, புதிய சம்வத் 2081வது ஆண்டின் துவக்கமாக நடைபெற்ற, பங்குச் சந்தை சிறப்பு வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 335.06 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 99 புள்ளிகளும் அதிகரித்தன.
நேற்று முன்தினம் சம்வத் 2080ம் ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சம்வத் 2081ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, பங்குச் சந்தைகளில் ஒரு மணி நேர சிறப்பு வர்த்தகம், நேற்று மாலை 6மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.வர்த்தக தொடக்கத்தில் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்வு கண்டு 80,000 புள்ளிகளைக் கடந்தசென்செக்ஸ், பின்னர் சிறிது நேரத்தில்சற்று சரிந்தது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ், 79,724.12 புள்ளிகளிலும்; நிப்டி 24,304.35 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.மஹிந்திரா அண்டு மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், என்.டி.பி.சி.,ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன், இண்டஸ்இண்ட் பேங்க், டாடா ஸ்டீல், எச்.டி.எப்.சி., பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கணிசமான உயர்வு கண்டது.
ஆசியாவின் பெரும்பாலான பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த நிலையிலும், இந்திய பங்குச் சந்தைகள், தீபாவளி மற்றும் புதிய வர்த்தக ஆண்டின் சென்டிமென்ட் காரணமாக உயர்வுடன்நிறைவடைந்துள்ளன.
25 சதவீதம் உயர்வு தந்த 'சம்வத் 2080'
சம்வத் 2080 ஆண்டில், சென்செக்ஸ் 14,484.38 புள்ளிகளும் நிப்டி 4,780 புள்ளிகளும் அதிகரித்தன. அதாவது, சென்செக்ஸ் 22.31 சதவீதமும் நிப்டி 24.60 சதவீதமும் உயர்வு கண்டன.