ADDED : பிப் 04, 2025 11:21 PM

டிரம்ப் அறிவிப்பால் நிம்மதி
கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, வர்த்தகப் போர் குறித்த நெருக்கடி தளர்ந்ததன் காரணமாக, வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று இந்திய சந்தை குறியீடுகள் நல்ல உயர்வு கண்டன. வர்த்தக நேர முடிவில், நிப்டி 1.62 சதவீதமும்; சென்செக்ஸ் 1.81 சதவீதமும் உயர்வுடன் நிறைவு செய்தன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள், 809 கோடி ரூபாய் பங்குகளை நேற்று வாங்கிஇருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.83 சதவீதம் குறைந்து, 75.33 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா அதிகரித்து, 87.07 ரூபாயாக இருந்தது.
அகர்வால் ஹெல்த்கேர்
கண் மருத்துவம் தொடர்பான பல்வேறு சேவைகளை அளித்து வரும் சென்னையைச் சேர்ந்த அகர்வால் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்குகள், நேற்று சந்தையில் பட்டியலிடப்பட்டன. பங்கு விலை 402 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், மும்பை பங்கு சந்தையில், இந்நிறுவன பங்கு ஒன்று, 1.26 சதவீத சரிவுடன், 396.90 ரூபாய்க்கும், தேசிய பங்குச் சந்தையில் 402 ரூபாய்க்கும் பட்டியலானது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11,929.30 கோடி ரூபாயாக உள்ளது.
மஹிந்திரா அண்டு மஹிந்திரா
முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்டு மஹிந்திராவின் சந்தை மதிப்பு, நேற்று 4 லட்சம் கோடி ரூபாயை தொட்டது. நேற்றைய வர்த்தக நேரத்தின் போது,
இந்நிறுவன பங்கு 3 சதவீதம் உயர்வு கண்டு, பங்கு ஒன்றின் விலை 2,370 ரூபாய் என்ற புதிய உச்சம் தொட்டது. கடந்த 3 நாட்களில் 9 சதவீதம் உயர்வு கண்ட மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்குகள், நேற்றைய வர்த்தக நேர முடிவில், 0.60 சதவீத உயர்வுடன், 3,190.35 ரூபாயாக இருந்தது.