
நம்பிக்கை தந்த ஏற்றம்
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவு செய்தன. அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு குறித்த கவலைகள் நீடிப்பதால், உலகளாவிய சந்தை போக்கு கலவையாக இருந்தது.
இருப்பினும், அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பாக இந்தியா ஏற்கனவே பேச்சு நடத்தியிருப்பதுடன், பரஸ்பர வரி இந்தியாவின் உள்நாட்டு பொருளாதாரத்தில் குறைந்தபட்ச பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமென, முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது. இதன் காரணமாக, நேற்று வர்த்தகம் துவங்கிய போது, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.
தொடர்ச்சியாக, கடந்த மார்ச்சில் இந்தியாவின் தயாரிப்பு துறை சார்ந்த வளர்ச்சி குறியீடு,
எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு கண்டதால், முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். கடந்த இரண்டு நாட்கள் சந்தை குறியீடுகள் கண்ட சரிவுக்கு,நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
நேற்றைய சந்தை உயர்வால் முதலீட்டாளர்கள் 3.54 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் ஈட்டினர்.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,539 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.12 சதவீதம் குறைந்து, 74.40 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா குறைந்து, 85.52 ரூபாயாக இருந்தது.